2017-01-03 16:00:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 1


2016ம் ஆண்டு நம்மைக் கடந்து சென்றுள்ளது, அல்லது, 2016ம் ஆண்டை நாம் கடந்து வந்துள்ளோம். 2016 என்று சொல்லும்போது, '16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று பெரியோர் கூறும் வாழ்த்துரை மனதில் ஒலிக்கிறது. நல்வழி காட்டும் கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்குரிய நண்பர்கள், தேவையான செல்வம், உழைப்புக்கேற்ற ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள வாழ்க்கைத்துணை, அறிவு-ஒழுக்கம்-ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கல் இல்லாத வாழ்க்கை, சிக்கனமாக செலவழித்து சேமிப்பை அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு... ஆகிய பதினாறும் பெற்று வாழ்வதே, பெருவாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், நாம் கடந்துவந்த 2016ம் ஆண்டில், நாம் 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தோமா என்ற கேள்வி மேலோங்குகிறது.

கடந்த ஆண்டின் இறுதி நாட்களில், செய்தித்தாள்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நாம் கடந்துவந்த ஆண்டை பின்னோக்கிப் பார்த்து, பல்வேறு அலசல்களை வெளியிட்டு வந்தன. இவற்றில், BBC வலைத்தளச் செய்தியில் வெளியான ஒரு கட்டுரையின் தலைப்பு, நம் கவனத்தை ஈர்க்கிறது. Paul Moss என்பவர், 2016ம் ஆண்டை அலசி, எழுதிய இக்கட்டுரைக்கு, "2016: The Year of Anger" அதாவது, "2016: கோபத்தின் ஆண்டு" என்று தலைப்பிட்டிருந்தார். இதை கோபத்தின் ஆண்டு என்று சொல்வதற்கு, பல நாடுகளில், அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறியிருந்தார்.

ஏப்ரல் மாதம், பிரேசில் நாட்டின் அரசுத்தலைவர் Dilma Rousseff அவர்களை பதவி விலகச் செய்தது; ஜூன் மாதம், பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தது; அமெரிக்க ஐக்கிய நாட்டில் அரசியல் பின்னணி ஏதுமற்ற Donald Trump அவர்கள், அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... என்று, பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, இவை அனைத்திலும், மக்கள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று Paul Moss அவர்கள் கூறியுள்ளார்.

சமுதாயக் கோபத்தின் வெளிப்பாடு, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஹாங்காங், வெனிசுவேலா என்று பல நாடுகளில் வெடித்தது. இங்கு வெளிப்பட்ட கோபங்கள் ஒரு குறிப்பிட்ட அரசுக்கோ, கட்சிக்கோ எதிராக காட்டப்பட்ட கோபம் அல்ல, மாறாக, தற்போது அதிகாரம் செலுத்தும் கட்டமைப்பு அனைத்திற்கும் எதிராக எழுந்த கோபம் என்று Paul Moss அவர்கள் தன் கட்டுரையில் கூறியிருப்பது நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

இந்தியாவில், பண நோட்டுகள் நீக்கம், பணத் தட்டுப்பாடு, தமிழ்நாட்டில், முதலமைச்சரின் மரணம், 'வர்தா' புயலின் விளைவுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளில், மக்கள் தங்கள் துயரத்தை, கோபத்தை, ஏமாற்றத்தை பல வழிகளில் வெளிப்படுத்தியதையும், 2016ம் ஆண்டு கண்டோம். கடந்து சென்ற ஆண்டின் இறுதி மணித்துளிகளில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்கள், இவ்வாண்டில் நிலவிய கோபத்திற்கு மற்றுமோர் அடையாளமாக அமைந்தது என்று சொல்லத் தோன்றுகிறது.

2016ம் ஆண்டு, ஏன் இவ்வளவு கோபமான ஆண்டாக இருந்தது என்பதற்கு, Paul Moss அவர்கள், தன் கட்டுரையில் சில விளக்கங்கள் தருகிறார். அவற்றில், கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் கூறும் ஒர் எண்ணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது: "நம்மில் பலர், வார்த்தைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் 'logos' என்ற அறிவு நிலையைவிட்டு விலகி, சிந்திக்கும் திறனற்ற 'pathos' என்ற உணர்ச்சி நிலையை அடைந்துவிட்டோமா?" என்ற கேள்வியை Paul Moss அவர்கள் நம்முன் வைக்கிறார்.

உலகில்  தோன்றும் ஒவ்வோர் உயிரினத்திற்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அறிவோம். மிருகங்களும், தாவரங்களும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பல வழிகளை ஆய்வு செய்து வருகிறோம். மனிதர்களாகிய நமக்கு, உணர்ச்சிகளுடன் அறிவுத்திறனும் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சனை ஏதுமின்றி வாழ்வு சுமுகமாகச் செல்லும் வேளையில், நாம் அறிவுத்திறனை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால், பிரச்சனைகள் எழும்போது, குறிப்பாக, அவை, ஒரு போராட்டமாக உருவாகும்போது, உணர்ச்சிகள் மேலோங்கிவிடுகின்றன.

வாழ்வில் போராட்டங்களை, பிரச்சனைகளை, துயரங்களைச் சந்திக்கும்போது, வருத்தம், ஏமாற்றம், இயலாமை, கோபம் என்ற பல உணர்ச்சிகள் நமக்குள் எழுகின்றன. இப்பிரச்சனைகளுடன், ஏராளமான கேள்விகளும் நம்மை வாட்டுகின்றன. இக்கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை, தெளிவாக, நிதானமாகத் தேடுவதற்குப் பொறுமை தேவை. இந்தப் பொறுமை இல்லாதபோது, நம்முள் எழும் உணர்ச்சிகள், சிந்திக்கும் திறனை வெற்றிகொள்கின்றன. மேலும், நாம் வாழும் துரித உலகில், இந்தப் பொறுமை தேய்ந்து, குறைந்து, இன்று காணாமல் போய்விட்டதென்றே சொல்லத் தோன்றுகிறது.

தனிப்பட்டப் பிரச்சனைகளைத் தீர்க்க பொறுமை இல்லாத நாம், சமுதாயப் பிரச்சனைகளிலும், பொறுமையின்றி, அவசர முடிவுகளை எடுக்கிறோம். நம் பொறுமையின்மையையும், உணர்ச்சிகளையும் ஆதாயமாக்கிக் கொண்டு, ஊடகங்கள், சமுதாயத்தில் எழும் சிறு உரசல்களையும் பெரிதாக்கி, தங்கள் இலாபத்தைக் தேடிக்கொள்கின்றன. ஊடகங்களின் பரபரப்புப் பரிமாற்றங்கள் போதாதென்று, நாமும், நம்மிடையே எழும் பிரச்சனைகளின் உண்மை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், நம் தொடர்பு கருவிகளின் வழியே அவற்றை விரைவில் பரப்பிவிடுகிறோம். பிரச்சனைகளைத் தீர்ப்பதைவிட, அவற்றை, உடனுக்குடன் பரப்புவதே நம் தொடர்பு கருவிகளின் நோக்கமாக அமைந்துவிட்டது. சரியான ஆதாரங்கள், அடிப்படை உண்மைகள் இவற்றை ஆய்வு செய்யும் அறிவுத்திறனை, அதாவது, 'logos'ஐ அடகு வைத்துவிட்டு, உணர்ச்சிகளுக்கு, அதாவது, 'pathos'க்கு முதலிடம் தருகிறோம்.

அறிவுத்திறனுக்கும், உணர்ச்சிக்கும் எழும் போராட்டம், நாம் இன்று விவிலியத்தேடலில் துவங்கும் ஒரு புதியத் தொடருக்கு அறிமுக எண்ணமாக அமைகிறது. ஆம், இன்று நாம், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் 'யோபு' நூலில் ஒரு தேடல் பயணத்தைக் துவங்குகிறோம். சிந்திக்கும் திறனுக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையில் நிகழும் ஓர் ஆழமான போராட்டத்தைச் சித்திரிக்கும் இந்நூல், விவிலியத்தின் 'ஞான இலக்கியம்' (Wisdom Literature) என்ற வகையைச் சேர்ந்தது.

துயரம் என்ற புயலில் சிக்கித் தத்தளிக்கும் யோபுவை நாம் இந்நூலில் சந்திக்கிறோம். புயலாக வந்த பிரச்சனைகள், தன்னைப் புரட்டிப்போட்டாலும், யோபு, துணிவுடன், நம்பிக்கையுடன் இறைவனைத் தேடினார் என்பதைக் கூறும் இந்நூல், நம் ஒவ்வொருவருக்கும் தேவையான பல நல்ல பாடங்களை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் இத்தேடல் பயணத்தைக் துவங்குகிறோம்.

நம் ஒவ்வொருவரையும் வந்தடையும் துயரங்கள், ஒரே வடிவிலும், அளவிலும் வந்தாலும், அவற்றை எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொருத்து, பின்விளைவுகள் இருக்கும். ஓர் உருவகத்தின் வழியே இதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

கண்ணாடி, பஞ்சு, தோல், உலோகம் என்று, நான்கு வகை பொருள்களை எண்ணிப்பார்ப்போம். ஒரு சுத்தியல் கொண்டு இந்த நான்கு பொருள்களையும் நாம் தட்டும்போது, கண்ணாடி, உடைந்துபோகிறது; பஞ்சு, மிருதுவாகிறது; தோல், உறுதிப்படுகிறது; உலோகம், கடினமாகிறது. விழும் அடி ஒன்றுதான் என்றாலும், அதன் விளைவுகள் வெவ்வேறு வகையில் அமைகின்றன. துன்பம், அல்லது, பிரச்சனை என்ற சுத்தியல், நம் வாழ்வைத் தாக்கும்போது, நம் மனங்கள் கண்ணாடியா, பஞ்சா, தோலா, அல்லது, உலோகமா என்பதைப் பொருத்து, விளைவுகள் இருக்கும்.

கண்ணாடிபோல நம் உள்ளங்கள் நொறுங்கிவிடக் கூடாது என்பதே நம் அனைவரின் விருப்பம். எனவே, நம் பிரச்சனைகளுக்கு, போராட்டங்களுக்குத் தீர்வுகாண பல வழிகளை நாம் மேற்கொள்கிறோம். நம் பிரச்சனை, துன்பம் இவற்றை தனித்து சிந்தித்து, தீர்வு காண முயல்கிறோம். பல வேளைகளில், நம் பிரச்சனை, துன்பம் இவற்றின் பாரத்தால், தெளிவாகச் சிந்திக்க இயலாதபோது, அடுத்தவர் உதவியை, குறிப்பாக, நம் உறவுகள், நண்பர்கள் உதவியை நாடி, தீர்வு காண முயல்கிறோம். இறுதியில் நமக்குத் தீர்வு தருவதற்கு, இறைவனை நாடுகிறோம். இந்த மூன்று வழிகளையும், யோபுவின் வாழ்வில் நாம் காண்கிறோம்.

அடுத்துவரும் வாரங்களில், யோபு சந்தித்த பிரச்சனைகள், அப்பிரச்சனைகளைத் தீர்க்க யோபுவின் மனைவி மற்றும் நண்பர்கள் கூறிய அறிவுரைகள், யோபு, இறைவனிடம் நேரடியாக மேற்கொண்ட உரையாடல், அவருக்கு இறைவன் தந்த பதில் என்று..., இந்நூலின் ஒவ்வொரு பகுதியிலும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல நமக்காகக் காத்திருக்கின்றன.

நாம் அடியெடுத்து வைத்துள்ள 2017ம் ஆண்டில், அறிவுத்திறன் என்ற அற்புதக் கொடையைப் பெற்றுள்ள மனிதர்களாகிய நாம், உணர்வுகளின் எரிமலையாக மாறிவிடாமல், உண்மையான அறிவுத்திறனைப் பயன்படுத்தி, நம் பிரச்சனைகளைத் தீர்கக, இறையருளை இறைஞ்சுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.