2017-01-03 15:28:00

சாதி, மதம், இனம் பெயரால் வாக்கு சேகரிக்க கட்சிகளுக்குத் தடை


சன.03,2017. இந்தியாவில், சாதி, மதம், இனம் மற்றும், மொழியின் பெயரால் தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்பது, சட்ட விரோதச் செயல் என்றும், அரசியல்வாதிகள் யாரும் அதுபோல் வாக்கு கேட்கக் கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில், மதமும், சாதியும் முக்கிய இரு விவகாரங்களாக இடம்பெறும் உத்தர பிரதேச மாநிலத்தில், இன்னும் சில வாரங்களில், தேர்தல் நடைபெறவுள்ளவேளை,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி T.S. Thakur அவர்கள், தேர்தல் நடவடிக்கைகள், சமயச் சார்பற்றதாய் இருக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில், தேர்தலில் வாக்குச் சேகரிப்பது சட்டவிரோதமானது, அது முறையற்ற செயல் என்றும், T.S. Thakur அவர்கள் கூறியுள்ளார்.

அரசியல் அமைப்பின்படி, இந்தியா, ஒரு சமயச் சார்பற்ற நாடு. ஆயினும், அரசியல் கட்சிகள், தங்களின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், வாக்குகளைச் சேகரிக்கவும், மதத்தையும், சாதியையும் முக்கிய கூறுகளாகப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  

இந்திய அரசியல் அமைப்பிலுள்ள சமயச் சார்பற்ற நன்னெறிமுறை பாதுகாக்கப்பட வேண்டுமென, 1996ம் ஆண்டில், அரசியல்வாதி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த T.S. Thakur அவர்கள் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, ஓர் அரசியல்வாதி, மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்குகளைச் சேகரித்தால், அந்தத் தேர்தல், செல்லாதது என அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பு அளித்தது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள், இவ்வாண்டில் நடைபெறவுள்ளவேளை, அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் யுக்திகளை வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கு இந்தத் தீர்ப்பு வழியமைத்துள்ளது என்று, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Reuter / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.