2017-01-02 16:39:00

புதிய ஆண்டில் இறைவனையும் அயலாரையும் அன்புகூர்வோம்


சன.02,2017. 2016ம் ஆண்டின் 12 மாதங்களும் நமக்குக் கொணர்ந்தது என்ன, 2017ம் ஆண்டு நமக்குக் கொணர உள்ளது என்ன என்பது குறித்து சிந்திப்பதிலிருந்து எவருக்கும் விலக்கு இல்லை என, அயர்லாந்து நாட்டின் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் இணைந்து, புத்தாண்டு செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் என்பது ஒரு நிச்சயமற்ற நிலைகளின் இடம் எனக் கூறும் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், இவ்வாண்டிற்குள் நுழையும் இவ்வேளையில், உலக மக்களை, குறிப்பாக மத்தியக் கிழக்குப் பகுதியில் துன்பங்களில் சிக்கியிருக்கும் மக்களையும், சிரியாவில் தொடரும் மனிதாபிமான நெருக்கடிகளையும் நினைவில் கொள்வோம் என விண்ணப்பித்துள்ளனர்.

நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்துவரும் மனித சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும், இறைவனை அன்புகூரவும், அயலாரை அன்புகூரவும், இயேசு விடுத்த கட்டளையை நினைவுகூர்ந்து செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர், அயர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஐரோப்பிய ஒன்றிப்பு அமைப்பிலிருந்து இங்கிலாந்து நாடு வெளியேற திட்டமிட்டுள்ள இவ்வேளையில், இலண்டன், பெல்ஃபாஸ்ட், டப்ளின் ஆகிய நகர்களிலிருந்து ஆட்சி புரியும் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள், அயர்லாந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும், அயர்லாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : ICN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.