2017-01-02 15:25:00

பாசமுள்ள பார்வையில்... தாயின் தியாகத்திற்கு ஈடுகட்ட இயலுமா?


தனது வாழ்வில் உச்சகட்ட உயர்வை எட்டிய ஒருவர், தனது அம்மா செய்த தியாகங்களுக்கு, நன்றியாக, அவ்வன்னைக்கு ஏதாவது செய்ய விரும்பினார். ஒருநாள் அவர், அம்மாவிடம், தனது விருப்பத்தைத் தெரிவித்து, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால், வியப்புடன் மகனைப் பார்த்தார் அம்மா. என்னுடைய கடமையைத்தானே செய்தேன். அதை எப்படி நீ எனக்குத் திருப்பிக் கொடுக்க முடியும்? நீ விரும்பினாலும், எவ்வாறு அதைத் திருப்பி கொடுக்க முடியும்? என்றார் அம்மா. இருந்தாலும், மகன், தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். அம்மாவும் தொடர்ந்து மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில் மகனின் ஆவலை நிறைவேற்ற நினைத்த அம்மா, மகனிடம், சரி, நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். மகனே, நீ குழந்தையாக இருந்தபோது எனதருகில் படுத்து உறங்கினாயே, அதைப்போல இன்று, ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு  எனக் கூறினார் அம்மா. நீங்கள் கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும், அது உங்களுக்கு மகிழ்வைத் தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது அம்மாவின் படுக்கையில் படுத்துக்கொண்டார் மகன். மகன் தூங்கி விட்டார் என்று அறிந்த அம்மா, எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பிக்கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில், ஒரு குவளைத் தண்ணீரை வீசி நனைத்தார். தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறுபக்கத்தில் உருண்டு படுத்தார். மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து, அவர் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினார் அம்மா. மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் நோக்கி நகர முயன்றார். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும்போது, தனது அம்மா, தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, என்ன அம்மா செய்கிறாய்… தூங்கக்கூட விடமாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர்பார்க்கிறாய் எனக் கேட்டார். அப்போது அம்மா அமைதியாக இவ்வாறு சொன்னார். நீ குழந்தையாக இருந்தபோது, இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்துவிட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக்கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஓர் இரவு தூங்க முடியுமா? என்றார் அம்மா. இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடுகொடுத்ததாக எடுத்துக்கொள்கிறேன் என்றார் அம்மா.

ஒரு தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. உலகிலுள்ள அன்னையர்க்கெல்லாம் உன்னத அன்னையாம் இயேசுவின் அன்னை செய்த தியாகத்திற்கு நாம் எவ்வாறு ஈடுசெய்யப் போகிறோம்?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.