2017-01-02 16:28:00

இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாவின் பங்கு


சன.02,2017. இறைமகனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா நெருக்கமான விதத்தில் பங்குபெற்றார் எனபதை மையமாக வைத்து இஞ்ஞாயிறன்று தன் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டின் முதல் நாள் திருஅவையில் சிறப்பிக்கப்படும் 'இறைவனின் தாய் அன்னை மரியா' திருவிழாவை முன்னிட்டு, தன் மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெத்லகேமுக்கு இடையர்கள் வந்தது பற்றி கூறும் ஞாயிறு வாசகம் பற்றியும் எடுத்துரைத்தார்.

தாய்க்கும் மகனுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில், தம் மகனை, பெண்ணிடம் பிறந்தவராக கடவுள் அனுப்பினார் என, இன்றைய விழா துவங்குகிறது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவனின் மீட்புத் திட்டத்திலிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளாத அன்னை மரியா, அதனோடு மிக நெருங்கிய விதத்தில் ஒன்றித்திருந்து செயல்பட்டார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மீட்புத் திட்டத்தில் தன் பங்கையும் அறிந்திருந்த அன்னை மரியா, இயேசுவின் தாய் என்ற உணர்வினால் நிறைவுகொண்டு, தன்னை மூடிக்கொள்ளவில்லை, மாறாக, தன்னைச் சுற்றி நடப்பவை ஒவ்வொன்றிற்கும் தன்னைத் திறந்தவராகச் செயல்பட்டதுடன், அவை குறித்து அக்கறைக் கொண்டவராகவும் இருந்தார் என்றார் திருத்தந்தை.

'ஆம்' என்ற வார்த்தை மூலம் மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தன் ஆவலை வெளிப்படுத்திய அன்னை மரியா, அதன்பின் அமைதி காக்கவில்லை, மாறாக, ஒவ்வொரு நாளும் இறைவன் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பதை புரிந்துகொள்ள முயன்று வந்தார் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களோடு இணைந்து, அன்னை மரியாவை நோக்கிச் செபித்தார்.

அன்னைமரியே, உமது தாழ்ச்சிக்காகவும், விசுவாசத்திற்காகவும், மன உறுதிக்காகவும் நன்றி கூறும் அதேவேளை, அமைதியின் பாதையில் நடந்திட எமக்கு உதவியருளும் என வேண்டுகிறோம், என மூவேளை செப உரையின் இறுதியில் செபித்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.