2016-12-30 15:15:00

உலகளாவிய அரசியல் பிறரன்பு கழகத்தின் பணிகளுக்கு பாராட்டு


டிச.30,2016. உலகில், உரையாடல் மற்றும் ஒப்புரவுப் பணிக்கு, ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும், உலகளாவிய அரசியல் பிறரன்பு மறைப்பணியாளர் கழகத்திற்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

2017ம் ஆண்டு பிறக்கவுள்ள இவ்வேளையில், உலகளாவிய அரசியல் பிறரன்பு மறைப்பணியாளர் கழகத்திற்குச் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பீடத்திற்கான தூதரகங்களில் பணியாற்றுபவர்களுக்கு, இக்கழகம், தொடர்ந்து நடத்திவரும்  பயிற்சிப் பாசறைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளாக இக்கழகம் ஆற்றிவரும் பணிகள், நம்பிக்கை, பயனுள்ள உரையாடல் மற்றும் நட்புச்சூழல்களை உருவாக்கியுள்ளன எனவும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.

Alfredo Luciani என்பவர், 1976ம் ஆண்டில், ஐரோப்பிய கிறிஸ்தவ கழகம் என்று பெயரில், இக்கழகத்தை முதலில் உருவாக்கினார். மிலானில் உருவாக்கப்பட்ட இக்கழகம், அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில், கிறிஸ்தவர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. நாளடைவில், இதன் பிறரன்புப் பணிகள் விரிவடைந்தன. பின்னர், 1996ம் ஆண்டு, செப்டம்பர் 27ம் தேதி, திருப்பீட பொதுநிலையினர் அவையால், இது ஓர் உலகளாவிய கழகமாக அங்கீகரிக்கப்பட்டது.   ஒவ்வொரு நாட்டிலும், நீதி மற்றும் அன்பை வளர்க்கவும், நாடுகளுக்கிடையே, மதங்களுக்கிடையே உறவுகளை மேம்படுத்தவும் இக்கழகம் பணியாற்றி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.