2016-12-29 15:38:00

பத்தாண்டு பணிகள் - ஐ.நா. பொதுச்செயலரின் இறுதிப் பேட்டி


டிச.29,2016. கடந்த 10 ஆண்டுகளில் தான் அடைந்த வெற்றிக்கு, ஐ.நா.அவையினர் அனைவரும் இணைந்து உழைத்ததே முக்கியக் காரணம் என்று, ஐ.நா. பொதுச்செயலர், பான் கி மூன் அவர்கள், அண்மையில் வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

2007ம் ஆண்டு, சனவரி முதல் நாள், ஐ.நா. அவையின் பொதுச் செயலராக தன் பணிகளைத் துவக்கிய பான் கி மூன் அவர்கள், மீண்டும், 2012ம் ஆண்டு இரண்டாவது முறையாக அப்பணியைத் தொடர்ந்து ஆற்றி, இம்மாத இறுதி நாளன்று தன் பத்தாண்டு காலப் பணியை நிறைவு செய்கிறார்.

பான் கி மூன் அவர்களின் பணியைக் குறித்து அவர் அண்மையில் அளித்த இறுதிப் பேட்டியில், தன் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறவில்லையெனினும், ஓரளவு நிறைவுடன், தான் இப்பணியை, Antonio Guterres அவர்களிடம் ஒப்படைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.

நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, பாரிஸ் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் ஆகியவை, தன் மனதுக்கு நிறைவு தரும் வெற்றிகள் என்று, பான் கி மூன் அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

பொதுச்செயலர் பொறுப்பில் தான் பணியாற்றியவேளையில் ஐ.நா. அவையின் உயர் பொறுப்புக்களில் பணியாற்ற, பெண்கள் அதிகமாக இணைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், பாலின சமத்துவம், ஐ.நா.அவையில் இன்னும் வளரவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த, 72 வயது நிறைந்த, பான் கி மூன் அவர்கள், ஐ.நா. அவையின் எட்டாவது பொதுச்செயலர் என்பதும், இவரைத் தொடர்ந்து 9வது பொதுச்செயலாளராக, சனவரி முதல் நாளன்று, பொறுப்பேற்கும் 67 வயது நிறைந்த António Manuel de Oliveira Guterres அவர்கள், போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதும், குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.