2016-12-29 15:27:00

கடினச் சூழலிலும் கண்டெடுத்த பணத்தை திருப்பித்தந்த மீனவப்பெண்


டிச.29,2016. 60 வயது மீனவப்பெண் வசந்தா என்பவர், 11 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் மற்றும் பண அட்டைகளோடு கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

சென்னைக்கருகே சோழவரம் தாலுகாவில் உள்ள கொடிப்பள்ளம் கிராமத்தில், மீன் விற்று வாழும் வசந்தா அவர்கள், ரெட் ஹில்ஸ் மீன் சந்தையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் ஏராளமான ரூபாய் நோட்டுகளும், அட்டைகளும் இருந்த பணப்பையை வழியில் கண்டார்.

பணப்பையோடு வீடு திரும்பிய வசந்தா, தன்னுடைய மகன் மாரிமுத்துவிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இருவருமாகச் சேர்ந்து பணப்பையைச் சோதனையிட அதில், ரூ.11, 585 பணமும், ஓட்டுநர் உரிம அட்டையும், சில கிரெடிட் கார்டுகளும் இருந்தன.

மேலும் சிவா என்ற ஆலோசகரின் அடையாள அட்டையும் அதில் இருந்தது. உடனடியாக இருவரும் அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேசி, அவரிடம் பணப்பையை ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசிய சிவா அவர்கள், ''மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் இருந்தாலும், வசந்தாவும் அவரின் மகனும் என்னுடைய பணத்தை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். மாரிமுத்து பல மாதங்களுக்கு முன்னால் நடந்த விபத்தொன்றில் மாற்றுத் திறனாளியாகி உள்ளார். தற்போது வேலை இல்லாத சூழலில் இருக்கிறார்.

ஆனாலும், பணப்பையை வாங்கிக்கொண்டு, நான் சிறிய தொகையை அளிக்க முயன்ற போது, அதை வாங்க மறுத்துவிட்டனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வசந்தாவின் பேரனுக்கு வேலை மிகத் தேவையாக இருந்தது. அவருக்கு ஏதேனும் ஓர் இடத்தில் மரியாதையான வேலையை வாங்கிக்கொடுக்க முயற்சித்து வருகிறேன். இதுதான் அவர்களுக்குச் செய்ய முடிகிற சிறு உதவியாக இருக்கும்.

பணத்தின் பின்னால் எல்லோரும் ஓடும் காலத்தில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சமயத்தில், பணம் கிடைத்தும் அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணிய வசந்தா அவர்கள், மனிதத்தில் மலர்ந்த குறிஞ்சிப் பூ'' என்கிறார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.