2016-12-29 15:29:00

இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன ஆக்ரமிப்பை நிறுத்த ஐ.நா. தீர்மானம்


டிச.29,2016. இஸ்ரேல் அரசு பாலஸ்தீனப் பகுதியில் ஆக்ரமிப்பு செய்து, குடியிருப்புக்களைக் கட்டிவரும் முயற்சியை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவை அண்மையில் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை, அமெரிக்க ஐக்கிய நாடு தடுக்காமல் இருந்ததைப் பாராட்டி, அந்நாட்டின் 22 மத அமைப்புக்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளன.

கிழக்கு எருசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளில், இஸ்ரேல் அரசின் ஆக்ரமிப்பு நிறுத்தப்படவேண்டும் என்றும், பாலஸ்தீனம் தன் தீவிரவாதத் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என்றும் ஐ.நா. அவை வெளியிட்ட தீர்மானத்தை, அமெரிக்க ஐக்கிய நாடு தடைசெய்யாமல் இருந்தது, நல்லதொரு முடிவு என்று, மத அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், ஏனைய கிறிஸ்தவ சபைகள் இணைந்து உருவாக்கியுள்ள 'மத்தியக் கிழக்கு அமைதியை ஆதரிக்கும் சபைகள்' என்ற அமைப்பினர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு எடுத்துள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை பாராட்டியுள்ளனர்.

இஸ்ரேல் அரசு, தன் ஆக்ரமிப்பையும், பாலஸ்தீன அரசு வன்முறையைத் தூண்டும் முயற்சிகளையும் கைவிட்டு, உரையாடல் பாதையைத் தேர்ந்தெடுக்க, 'மத்தியக் கிழக்கு அமைதியை ஆதரிக்கும் சபைகள்' என்ற அமைப்பினர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.