2016-12-29 13:24:00

இது இரக்கத்தின் காலம் : உறவுகள் காப்பாற்றப்பட...


ஒரு தந்தையும் மகனும், நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்குப் போனார்கள். விருந்துக்கு முன்பாக அவர்களுக்குத் தேநீர் வழங்கப்பட்டது. தந்தை, தேநீர் கோப்பையைக் கையில் எடுப்பதற்கு முன்பு, அது தவறி கிழே விழுந்து உடைந்து விட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த நண்பர், ‘‘அழகான சீனக் கோப்பை இது. எப்படி உடைந்தது?’’ என ஆதங்கமாகக் கேட்டார். எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது என, தந்தை சோகமான குரலில் சொல்லவே, நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக்கொண்டு போனார். இதைக் கண்ட மகன், தந்தையிடம் கேட்டான், உங்கள் கை தேநீர் கோப்பையில் படவே இல்லையே. பின்பு ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்?’’என்று. உண்மைதான்! தேநீர் கோப்பையைக் கொண்டுவந்து வைத்தது நண்பரின் மகள். அவள் கவனமாக மேஜை மீது அதை வைக்கவில்லை. ஆகவே அது தவறி விழுந்து விட்டது. இந்த உண்மையைச் சொன்னால், நண்பர் ஏற்றுக்கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப்படவே செய்வார். அதற்குப் பதிலாகச் செய்யாத குற்றத்தை ஏற்றுக்கொண்டு விடுவதே சரி என நினைத்தேன். ஒருவேளை இந்த உண்மைக்கு நீதான் சாட்சி என விளக்கிச் சொல்லியிருந்தால், அவர் மகளைக் கோபித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு, அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும். பின்னர், எங்கள் நட்பிலும் விரிசல் ஏற்பட்டுவிடும். உறவுகள் உடைபடாமல் காப்பாற்ற இப்படிச் சிறு பொய்கள் தேவைப்படவே செய்கின்றன!’’ என்று தந்தை சொன்னார்.

ஆம். உறவுகள் காப்பாற்றப்பட, விட்டுக்கொடுத்தலும், புரிந்துகொள்ளுதலும் அரவணைத்துப்போவதும் அவசியம். நற்செயல்கள் புரிவதற்கு நல்லெண்ணங்களே முதற்படி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.