2016-12-28 14:44:00

மறைக்கல்வியுரை: நம்பிக்கை வாய்ப்பு இல்லா சூழலிலும் நம்பிக்கை


டிச.,28,2016. கிறிஸ்து பிறப்புப்பெருவிழா இப்போதுதான் முடிவுற்றுள்ளது, அதேவேளை, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் துவங்க உள்ளன. இந்த ஆண்டின் இறுதி புதனான இந்நாளில், தன் மறைக்கல்வி உரையை,'கிறிஸ்தவ நம்பிக்கை' என்ற தன் முந்தைய மறைக்கல்வி உரைகளின் தொடர்ச்சியாக  வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்விப் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, இந்தக் கிறிஸ்து பிறப்பு காலத்தில், ஆபிரகாமின் எடுத்துக்காட்டு குறித்து நோக்குவோம். புனித பவுல் உரைப்பதுபோல், நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள் இல்லாத சூழல்களிலும், இறைவனின் வார்த்தைகளில் முழு நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் ஆபிரகாம். அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என்ற இறைவனின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொண்டு, தன் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி, புதியதொரு  பூமி நோக்கிச் செல்கிறார் ஆபிரகாம். கடவுள் வழங்கிய வாக்குறுதி நிறைவேறுவதில் மிகுந்த காலதாமதம் இடம்பெற்றபோதிலும், அது நிறைவேறாது என்பதுபோல் தோன்றியபோதிலும், தன் நம்பிக்கையை கைவிடாது தொடர்ந்தார் ஆபிரகாம். அவருடைய மனச்சோர்வும், புகார்களும்கூட, இறைவனில் அவரின், தொடர்ந்த நம்பிக்கையின் அடையாளங்களாகவே இருந்தன.   விசுவாசத்தில் நம்மனைவரின் தந்தையாக இருக்கும் ஆபிரகாம், நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித் தருகின்றார், அதாவது, இறைவனின் வார்த்தையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பது என்பது, நிச்சயமற்ற சூழல்களையும், ஏமாற்றங்களையும், திகைப்புக்களையும் ஒருபோதும் கொணராது என்ற அர்த்தமல்ல என்று காட்டுகிறார் ஆபிரகாம். இத்தகையதோர் நேரத்தில்தான், கடவுள் ஆபிரகாமுக்குத் தோன்றி, அவரின் கூடாரத்தை விட்டு வெளியே வரவைத்து, எண்ணற்ற விண்மீன்களால் மின்னிக் கொண்டிருந்த வானத்தைக்காட்டி,  ஆபிரகாமின் வழிமரபினர் அந்த விண்மீன்களைப்போல் எண்ணற்றவராய் இருப்பர் என உறுதியளிக்கிறார். நம்பிக்கை என்பது எப்போதும் வருங்காலத்தை நோக்கியது, கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நோக்கியது. நாமும் அச்சமின்றி, கூடாரங்களைவிட்டு, அதாவது குறுகிய கண்ணோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கும், நம் பார்வையை உயர்த்தி விண்மீன்களை நோக்கவும், ஆபிரகாமின் எடுத்துக்காட்டு நமக்கு கற்பிப்பதாக.

இவ்வாறு, தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், குறிப்பாக, பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்திருந்த குழுவொன்றிற்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, இறுதியில் அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.