2016-12-28 15:37:00

அருள்பணி டாம் குறித்து, இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்


டிச.28,2016. அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் காணொளிப் பதிவைக் கண்டேன்; அவரது விடுதலைக்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அருள்பணி டாம் அவர்களின் விண்ணப்பம் அடங்கிய காணொளி, இத்திங்களன்று வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் சுவராஜ் அவர்கள் டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்து வருகிறார் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடத்தப்பட்ட அருள்பணி அலெக்ஸ் பிரேம்குமார், மற்றும் ஜூடித் டிசூசா ஆகியோரை விடுவித்ததுபோல, அருள்பணி டாம் அவர்களையும் விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, அமைச்சர் சுவராஜ் அவர்களின் டுவிட்டர் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, வெளியுறவுத் துறை சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய விகாஸ் சுவரூப் அவர்கள், ஏமன் நாட்டில் நிலையானதோர் ஆட்சி இல்லாத சூழலில், அருள்பணி டாம் அவர்களின் விடுதலை குறித்த முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள இயலாமல், அருகில் உள்ள நாடுகளின் உதவிகளைக் கோரிவருகிறோம் என்று கூறினார்.

ஆதாரம் : IndiaToday / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.