2016-12-28 15:30:00

அருள்பணி டாம் காணொளியைப் பற்றி ஆயர் பால் ஹிண்டேர்


டிச.28,2016. அருள்பணி டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்களைக் குறித்த காணொளி, மன ஆறுதலைத் தரும் அதே வேளையில், வருத்தத்தையும் உருவாக்குகின்றது என்று, தென் அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹிண்டேர் (Paul Hinder) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏமன் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மார்ச் மாதம் கடத்தப்பட்ட அருள்பணி டாம் அவர்கள், திருத்தந்தை, ஆயர்கள், இந்திய அரசு அதிகாரிகள் அனைவரும் தன் உதவிக்கு வருமாறு அழைப்பு விடுத்த காணொளி, இத்திங்களன்று வெளியானதைத் தொடர்ந்து, ஆயர் ஹிண்டேர் அவர்கள், தன் கருத்துக்களை, செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

காணொளியில், அருள்பணி டாம் அவர்கள், தோன்றி பேசுவதைக் காண்கையில், அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆறுதல் எழுகிறது என்றாலும், அவர் எப்போது இவற்றைப் பேசினார், எங்கிருந்து பேசினார், அவர் இவ்வாறு பேச, கடத்தல் காரர்களால் வற்புறுத்தப்பட்டாரா என்ற கேள்விகள் எழுகின்றன என்று, ஆயர் ஹிண்டேர் அவர்கள் எடுத்துரைத்தார்.

தனக்குத் தெரிந்தவரை, பல்வேறு வழிகளில் அருள்பணி டாம் அவர்களின் விடுதலைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைத் தெளிவுபடுத்திய ஆயர் ஹிண்டேர் அவர்கள், யாரும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அருள்பணி டாம் கூறியிருப்பது, அவருக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையே காட்டுகிறது என்று, விளக்கிக் கூறினார்.

இந்தக் காணொளியில் அருள்பணி டாம் அவர்கள் கூறியுள்ள கூற்றுக்களால் மக்கள் அச்சமடையாமல், உண்மைகளை அறிந்துகொள்ளவும், அவரது விடுதலைக்காக தொடர்ந்து செபிக்கவும் வேண்டுமென்று ஆயர் ஹிண்டேர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.