2016-12-27 14:48:00

டேஜே கூட்டத்திற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து


டிச.27,2016. லாத்வியா நாட்டின் ரிகாவில், டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு நடத்தும் 39வது பன்னாட்டு இளையோர் கூட்டத்திற்கு, பல்வேறு கிறிஸ்தவ மற்றும் உலகளாவியத் தலைவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இங்கிலாந்து ஆங்லிக்கன் சபைத் தலைவர் பேராயர், உலக கிறிஸ்தவ மன்றச் செயலர், உலக லூத்தரன் கூட்டமைப்புப் பொதுச் செயலர், ஐ.நா. பொதுச் செயலர், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், லாத்வியா அரசுத்தலைவர் என, பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.

இவ்வுலகில் ஏராளமான மக்கள், அச்சத்திலும், வறுமையிலும் வாழ்கின்றவேளை, நம்பிக்கையின் செய்தியை வழங்குமாறு, இளையோரைக் ,கேட்டுக்கொண்டுள்ளார், ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி.

மேலும், நம்பிக்கை, நம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அனுபவமாக இருக்கும்வேளை, நம் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம், இந்நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டுமென, உலக கிறிஸ்தவ மன்றச் செயலர், அருள்திரு Olav Fykse-Tveit அவர்கள், தனது செய்தியில்  கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், டேஜே இளையோருக்கு அனுப்பியுள்ள செய்தியில், நம் உலகம் எண்ணற்ற அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது எனவும், ஐ.நா.வின் 17 வளரச்சித்திட்ட இலக்குகளின் வழியாக, இவ்வுலகில் போர், வறுமை மற்றும் அடக்குமுறையை ஒழிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

நாம் எல்லாரும் விரும்பும், அமைதி, வளர்ச்சி, மனித மாண்பு மற்றும் மனித உரிமைகள் நிறைந்த உலகமாக, 2017ம் ஆண்டை அமைப்பதற்கு, இளையோரை, தான் நம்பியிருப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.