2016-12-27 14:57:00

இரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


டிச.27,2016. கிறிஸ்மஸ் தினத்தன்று இடம்பெற்ற, இரஷ்ய விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, தனது செபங்களையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்கள் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு தனது அனுதாபங்களைத் தெரிவித்த திருத்தந்தை, கருங்கடலில், இரஷ்ய விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு, தான் மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

அவ்விமானத்தில் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், விமானப் பணிக்குழு, இராணுவத்தின் சிறந்த பாடகர் குழு, இசைக் கருவிகளை மீட்டுபவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் மற்றும், இரஷ்ய மக்களுக்கு, ஆண்டவர் ஆறுதலளிப்பாராக என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின், 26வது பாப்பிறை தலைமைப் பணியை முன்னிட்டு, இந்த இசைக்குழு, 2004ம் ஆண்டில், வத்திக்கானில், இசைக் கச்சேரியை நடத்தியது எனவும், திருத்தந்தை கூறினார்.

டிசம்பர் 25, இஞ்ஞாயிறன்று, கருங்கடலில் விழுந்து நொறுங்கிய Tu-154 ஜெட் விமானத்திலிருந்து குறைந்தது 12 சடலங்களை மீட்டுள்ளதாகவும், அவை மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சோச்சியிலிருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களில், அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் என, 92 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில், இரஷ்ய இராணுவத்தால் போற்றப்படும் அலெக்ஸாண்ட்ரோவ் என்செம்பிள் என்ற இசைக்குழுவினரின் உறுப்பினர்களும் அடங்குவர். 3,500 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ள, ஒரு மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கை, இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.