2016-12-27 15:34:00

இது இரக்கத்தின் காலம் : மன்னிப்பவர், மறப்பவர் இறைவன்


'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடலில், மன்னிக்கும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதை மிக அழகாக சித்திரித்துள்ளார், திருத்தந்தை. இத்திருத்தூது மடலின் இதயமாக இப்பகுதி அமைந்துள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல. "என் பாவங்கள் அனைத்தையும் உம் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீர்" (எசாயா 38:17) என்று, அரசர் எசேக்கியா கூறிய வார்த்தைகளையும், "அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" (மீக்கா 7:19) என்று இறைவாக்கினர் மீக்கா கூறும் சொற்களையும், தன் மடலில் எடுத்துக்காட்டுகளாகக் கூறியுள்ளார் திருத்தந்தை.

"இறைவனின் இரக்கம் அனைத்துப் பாவங்களையும்விட பெரியது; இறைவனின் இரக்கத்தை எதுவும் தடைசெய்ய முடியாது" என்ற கருத்துக்களை பல தருணங்களில், பகிர்ந்து வந்துள்ளார், திருத்தந்தை. இரக்கத்தின் சிறப்பு யூபிலியையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அவ்வெனீரே' (Avvenire) என்ற இத்தாலிய நாளிதழுக்கு வழங்கிய ஒரு பேட்டியில், இறைவன், நம் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, மறந்தும்விடுகிறார் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்:

"இறைவனின் பெயர், இரக்கம். அதுவே அவரது வலுவற்ற அம்சமாகவும் விளங்குகிறது. அவரது இரக்கம், மன்னிக்கவும், மறக்கவும் செய்துவிடுகிறது. இறைவனுக்கு மோசமான ஞாபகசக்தி உள்ளதென்று நான் நினைக்கிறேன். அவர் ஒருமுறை மன்னித்துவிட்டால், அதை முற்றிலும் மறந்துவிடுகிறார். மன்னிப்பதில் அவர் மகிழ்வடைகிறார்."

திருத்தந்தை கூறும் இந்த எண்ணங்கள், எபிரேயருக்கு எழுதப்பட்ட மடலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன: "அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன்." (எபிரேயர் 8:12)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.