2016-12-26 13:46:00

பங்களாதேசில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் உள்ளன‌


டிச.26,2016. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் உள்ளன என்ற கருத்திற்கு பங்களாதேஷ் அரசு முழு ஆதரவு வழங்குகிறது என அறிவித்தார், அந்நாட்டு பிரதமர் Sheikh Hasina.

கிறிஸ்தவர்களின், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் Sheikh Hasina அவர்கள், பங்களாதேசைச் சேர்ந்த ஒருவரை கர்தினாலாக உயர்த்தியதற்கு முதலில் திருத்தந்தைக்கு நன்றி நவில்வதாகக் கூறினார்.

கடந்த காலங்களில் புதிய கர்தினால் Patrick D'Rozario அவர்கள், நாடு முழுவதன் நலனுக்காக உழைத்துபோல், வருங்காலத்திலும் தொடர்ந்து உழைப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பிரதமர்.

ஒவ்வொருவரும் அவரவர் மத நம்பிக்கைகளைப் பின்பற்ற உதவும் வகையில், நாட்டில், அமைதியான ஒரு சூழல் உருவாக்கப்படுவதில், அனைவரின் ஈடுபாடும் அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர் Sheikh Hasina அவர்கள், மதத்தை எதிர்மறையான வழிகளில் பயன்படுத்துவது, பேராபத்தைக் கொண்டு வரும் எனவும் தெரிவித்தார்.

இதே கிறிஸ்மஸ் கொண்டாட்ட சந்திப்பில், பிரதமருடன் கலந்துகொண்ட சமயத்துறை அமைச்சர் Motiur Rahman அவர்கள், பங்களாதேசில் கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலைகளை முன்னேற்றுவதில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றியுள்ள, மற்றும், ஆற்றிவரும் பணிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

அரசு அதிகாரிகளும் கத்தோலிக்க மதத்தலைவர்களும் கலந்துகொண்ட இந்த  பெருவிழாக் கொண்டாட்டத்தில், கிறிஸ்தவ விசுவாசிகளுடன், இந்து, முஸ்லீம் மற்றும் புத்த மதத்தினரும் பெருமெண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.