2016-12-25 13:20:00

கிறிஸ்மஸ் விழாவில், திருத்தந்தையின், ‘Urbi et Orbi’ செய்தி


டிச.25,2016. அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். அன்னை மரியா, புனித யோசேப்பு, பெத்லகேமின் இடையர்கள் என இவர்கள் அனைவரும், மீட்பராம் இயேசு, சிறு குழந்தையாக மாடடைக் குடிலில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டபோது அடைந்த ஆச்சரிய அனுபவத்தை திருஅவை இன்று மீண்டும் அனுபவிக்கிறது. ஒளி நிறைந்த இந்நன்னாளில், எசாயாவின் இறைவாக்கு அறிவிப்பு இன்று மீண்டும் எதிரொலிக்கிறது. “ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்” (எசா.9:6) என்கிறார், இறைவாக்கினர் எசாயா.

இறைவன் மற்றும் அன்னை மரியாவின் மகனாகிய இக்குழந்தையின் வல்லமை என்பது, இவ்வுலகின் வளத்தையும் வலிமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுவதல்ல, மாறாக, அவரின் அன்பெனும் வல்லமையை அடிப்படையாகக் கொண்டது.

இந்த வல்லமைதான், விலங்குகள், தாவரங்கள், தாதுக்கள் என அனைத்துப் படைப்புக்களுக்கும் வாழ்வளிப்பது, மற்றும் மண்ணையும் விண்ணையும் படைத்தது. இந்த சக்திதான், ஆணையும் பெண்ணையும் கவர்ந்திழுத்து, ஒரே உடலாக்கி ஒரே வாழ்வாக்குகிறது. இந்த சக்திதான், புதிய பிறப்பை வழங்குகிறது, குற்றங்களை மன்னிக்கிறது, எதிரிகளை ஒப்புரவாக்குகிறது, மற்றும் தீயவற்றை நன்மையாக மாற்றுகிறது. இதுவே இறை வல்லமை.

இயேசு கிறிஸ்து தன் மகிமையைத் துறந்து, மனிதனாக உருவெடுப்பதற்கு இட்டுச் சென்றதும், இந்த அனபின் வல்லமையே.

தன் வாழ்வையே சிலுவையில் கையளிக்கவும், பின்னர், சாவிலிருந்து உயிர்த்தெழவும் இயேசுவை வழிநடத்திச் சென்றதும், இந்த அன்பின் வல்லமையே.

இயேசுவின் பணி வல்லமையே, நீதியும் அமைதியும் நிறைந்த இறையரசை இவ்வுலகில் துவக்கி வைக்கிறது.

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக். 2:14) என்று, இயேசு பிறப்பின்போது, விண்ணகத்தூதர் பேரணி கடவுளைப் புகழ்ந்துப் பாடியதற்கு இதுவே காரணம்.

இன்று இச்செய்தி, உலகின் கடையெல்லை வரை, அனைத்து மக்களையும், சென்றடைவதாக. குறிப்பாக, அமைதிக்கான ஏக்கத்தையெல்லாம் விட பலம் பொருந்தியதாக இருக்கும் போர்களாலும், மோதல்களாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சென்றடைவதாக.

போரால் பாதிக்கப்பட்டிருக்கும் சிரியாவின் மக்களுக்கு அமைதி கிட்டுவதாக. இங்குதான் அளவுக்கதிகமான இரத்தச் சிந்தல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்திற்கும் மேலாக, அண்மை வாரங்களில் மிக மோசமான மோதல்களால் துன்புறும் அலெப்போ நகரின் மக்களுக்கு, நாம், மனிதாபிமான சட்டங்களை மதிப்பவர்களாக, அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளுக்கும், ஆதரவுக்கும் உறுதியளிப்போமாக. நாட்டிற்குள் மக்கள் ஒன்றிணைந்து வாழும் நிலையை மீண்டும் உருவாக்கும் நோக்கில்,

அனைத்துலக சமுதாயம், பேச்சுவார்த்தைகளின் வழியே ஒரு தீர்வை, தீவிரமாகத் தேடுவதற்கும், ஆயுதங்களின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்படுவதற்கும் உரிய நேரமிது.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்ட நிலமான புனித பூமியின் மக்களுக்கு அமைதி கிட்டுவதாக! பகைமையையும் பழிவாங்குதலையும் கைவிட்டு, இணக்க வாழ்வையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதலையும் உள்ளடக்கிய வருங்காலத்தை ஒன்றிணைந்துக் கட்டியெழுப்புவதற்கான மனவுறுதியை பாலஸ்தீனியர்களும், இஸ்ரயேலர்களும் கொள்வார்களாக.

பயங்கரவாதத்தின் கொடூரங்களாலும், போராலும், துன்பங்களை அனுபவிக்கும் ஈராக், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளின் மக்கள், மீண்டும், ஒன்றிப்பையும் உடன்பாட்டையும் அனுபவிப்பார்களாக.

ஆப்ரிக்காவில் அமைதி நிலவுவதாக, குறிப்பாக, மரணத்தையும் கொடூரத்தையும் ஆற்றுவதற்கு, குழந்தைகளையும் தூண்டும் வகையில் அவர்களைச் சுர‌ண்டும் அடிப்படைவாத பயங்கரவாதத்தால் துன்புறும் நைஜீரியாவிற்கு அமைதி கிட்டுவதாக. மோதல் மனநிலைக்கு மாற்றுச் சிந்தனையாக, கலந்துரையாடல் எனும் கலாச்சாரத்தை தேர்ந்துகொண்டவர்களாக நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் வளர்ச்சி மற்றும் பகிர்வின் பாதையைத் தேர்ந்துகொண்டு,  பிரிவினைகளைக் குணப்படுத்தும் வகையில், சூடானுக்கும், காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் அமைதி கிட்டுவதாக.

மோதல்களின் விளைவுகளால் துன்புறும் கிழக்கு உக்ரைன் நாட்டில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள அனைத்து முயற்சிகளும் நடைமுறைக்குக் கொணரப்படவும், துன்புறும் மக்களுக்கு உடனடி நிவாரணப்பணிகள் வழங்கப்படவும் வேண்டும் என அனைத்துலக சமூகமும் முன்வந்துச் செயலாற்றவேண்டிய அவசரத் தேவை உள்ள இன்றைய நிலையில், அம்மக்களுக்கு அமைதி கிட்டுவதாக.

உரையாடல் மற்றும் ஒப்புரவின் புதிய பாதையில் மனவுறுதியுடன் நடைபோட முன்வந்திருக்கும் கொலம்பிய மக்களுக்கு, நல்லிணக்கம் கிட்டவேண்டும் என மன்றாடுவோம்.

இதே மனத்துணிவால் வெனேசுவேலா நாடும் தூண்டப்பட்டு, இன்றைய பதட்ட நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களனைவருக்கும் நம்பிக்கையுடன் கூடிய வருங்காலத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கோள்வதாக.

பல்வேறு பகுதிகளில், தொடர் அநீதிகளாலும், அச்சங்களாலும் துன்பங்களை அனுபவிக்கும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிட்டுவதாக.

மியான்மார் நாடு, தன் முயற்சிகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அமைதியுடன் கூடிய இணக்க வாழ்வவை ஊக்குவிக்கவும், அனைத்துலக சமூகத்தின் உதவியுடன், மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்கவும் முன்வருவதாக.

தான் அனுபவிக்கும் பதட்ட நிலைகளைக் காணும் கொரிய தீபகற்பம், புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பின் துணையோடு அவற்றை மேற்கொள்வதாக.

தீவிரவாதத்தின் கொடும் செயல்களால் தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்தவர்களுக்கும், இத்தகைய அச்சத்தை மக்கள் மனங்களில் விதைக்கும் பலருக்கும் அமைதி உரித்தாகுக.

ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கும், பசியாலும் வன்முறைகளாலும் துன்புறுவோருக்கும், அமைதி, வெறும் வார்த்தைவடிவில் அல்ல, மாறாக செயல்வடிவில் உருவாகட்டும்.

ஒரு சிலரது பேராசையாலும், சுயநலத்தாலும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் பலருக்கும், இதனால் பல்வேறு அடிமை நிலைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களுக்கும் அமைதி உரித்தாகுக.

நிலநடுக்கம், மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக.

இறைவன் குழந்தை வடிவில் வந்துள்ள இந்தச் சிறப்பான நாளில், பசியாலும், போர்களாலும், வயது வந்தோரின் சுயநலத்தாலும் தங்கள் குழந்தைப்பருவத்தை இழந்துள்ள குழந்தைகளுக்கு அமைதி உரித்தாகுக.

அமைதி ஒன்றே நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் என்ற குறிக்கோளுடன், தங்கள் குடும்பங்களிலும், சமுதாயத்திலும் நீதியையும், மனிதாபிமானத்தையும் ஒவ்வொரு நாளும் வளர்த்து வரும் நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக.

அன்பு சகோதர,  சகோதரிகளே, "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்": அவரே, "அமைதியின் இளவரசர்". அவரை நாம் வரவேற்போம்.

ஊருக்கும் உலகுக்கும் என்ற சிறப்பு ஆசீரை வழங்கியத் திருத்தந்தை, பல்வேறு நாடுகளிலிருந்து வளாகத்தில் கூடியிருந்த அனைவருக்கும், இன்னும், வானொலி, தொலைக்காட்சி, ஏனைய ஊடகங்கள் வழியே இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நமது சொல்லாலும், செயலாலும் அமைதியின் சாட்சிகளாக வாழ இறைவன் நமக்கு வரம் தருவாராக; அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறி, வளாகத்தில் கூடியிருந்த அனைவரிடமிருந்தும் விடைபெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.