2016-12-23 15:08:00

அமைதியான கிறிஸ்மஸைச் சிறப்பிக்க கிறிஸ்தவர்கள் ஆவல்


டிச.23,2016. மோதல்கள் நிறைந்த ஒடிசா மாநிலத்தில், அமைதியான மற்றும் மகிழ்வான கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க, கிறிஸ்தவர்கள் விரும்புகின்றனர் என்று, அம்மாநில தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டின் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு செய்தி வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், ஒடிசாவில் நடந்த கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகளின் நினைவு, இன்னும் மறையாமல் இருந்தபோதிலும், அம்மாநிலத்தில், 2016ம் ஆண்டில், இறையழைத்தல்கள் அதிகரித்துள்ளன என்று கூறினார்.

ஒடிசாவில், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே ஒருமைப்பாட்டுணர்வு அதிகரித்துள்ளது என்றும், கொல்கத்தா அன்னை தெரேசா புனிதராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில், ஒரு சாலைக்கு, அன்னை தெரேசாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார், பேராயர் பார்வா. 

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றன எனினும், மறைசாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து என்பதற்கேற்ப, தலத்திருஅவை வளர்ந்து வருகிறது என்றும், கூறியுள்ளார் பேராயர் பார்வா.

2017ம் ஆண்டு, எல்லாருக்கும், புனிதம், அமைதி, மகிழ்வு மற்றும், வளமை நிரம்பிய ஆண்டாக அமைவதற்கு, தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார், கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.