2016-12-22 15:16:00

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் அடையாளங்கள்–அ.பணி விமல்


டிச.22,2016. கிறிஸ்மஸ் என்றவுடன், அப்பெருவிழாவோடு தொடர்புடைய, இயேசு பாலன்,  கிறிஸ்மஸ் குடில், வானதூதர்கள், விண்மீன், விலங்குகள், கீழ்த்திசை ஞானிகள், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் இனிப்பு, கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்மஸ் தாத்தா, பரிசுப் பொருட்கள் என, இருபது பல்வேறு அடையாளங்கள் நம் நினைவுக்கு வருகின்றன. இந்தக் கிறிஸ்மஸ் அடையாளங்கள் மற்றும், அவற்றின் வரலாற்று பின்னணிகள் பற்றி விளக்குகிறார் அருள்பணி விமல் ஆரோக்யராஜ். சுல்தான் பேட்டை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், உரோமையில், திருஅவை சட்டம் பயின்று வருகிறார்.

1. கிறிஸ்மஸ் குடில்

கிறிஸ்மஸ் குடில் என்பது கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தில் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. தொடக்க கட்டத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகளை சித்தரிக்கின்ற வகையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் ஒத்த வேடம் அணிந்த நபர்களைக் கொண்டு தத்ரூபமாக கிறிஸ்மஸ் குடிகள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இடையர்கள், ஆடுகள், வானதூதர்கள், கால்நடைகள், கழுதைகள், ஒட்டகங்கள் மூன்று ஞானிகள் என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதும்ää குறிப்பிடாததுமான கதாபாத்திரங்களை உள்ளடக்கியவைகளாக கிறிஸ்மஸ் குடில்கள் அமைக்கப்பட்டன.

வரலாற்றில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் குடில் அமைத்த பெருமை புனித பிரான்சிஸ் அசிசியாரையே சாரும். இவர், கி.பி. 1223-ல் இத்தாலியின் கிரேச்சோ (Greccio) என்ற இடத்தில், ஒரு குகையில் தத்ரூபமான முறையில் ஒரு குடிலை அமைத்தார். இந்நிகழ்வை கி.பி. 1260-ல், புனித பொனவெந்தூர் தனது “புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வு”என்ற புத்தகத்தில், பதிவு செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அன்றைய திருத்தந்தை மூன்றாம் ஒனோரியஸ் (Pope Honorius III) அதை மந்திரித்து துவங்கி வைத்தார். இந்நிகழ்வு, மாபெரும் வரவேற்பை பெற்று, நாடு முழுவதும் அரங்கேறியது. காலப்போக்கில் கிறிஸ்மஸ் குடிலில் கதாபாத்திரங்களைச் சித்திரக்கின்ற உருவங்கள் வைக்கப்பட்டன. மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது ஆட்சிக் காலத்தில் இந்நிகழ்வை அதிகமாகப் பிரபலப்படுத்தினார். இந்த மரபு இத்தாலி நாட்டைத் தொடர்ந்து உலகெங்கிலும் வரவேற்பைப் பெற்றது. நற்செய்தியாளர்களான மத்தேயு மற்றும் லூக்கா இவர்களின் கிறிஸ்து பிறப்பு பதிவுகள், இந்த கிறிஸ்மஸ் குடில்களின் ஆதாரங்களாக அமைகின்றன(லூக்.2:8-20); (மத்.2:1-23).

2. கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நட்சத்திரங்கள்”கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் மிக முக்கியமான, முதன்மையான அடையாளங்களாக திகழ்கிறது. கிறிஸ்மஸ் நட்சத்திரம், கிறிஸ்துவின் பிறப்பை அடையாளப்படுத்துகிறது. விவிலியத்தில், மத்தேயு நற்செய்தியின் பதிவின்படி, கிறிஸ்து பிறப்பின் நட்சத்திரம், கீழ்திசை ஞானிகளுக்குத் தோன்றி அவர்களை, பெத்லகேமிற்கு வழிநடத்துகிறது. அவர்கள், வழியில் ஏரோது அரசனை கண்டு, யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரின் நட்சத்திரத்தைக் கண்டோம், அவரை வணங்க வந்தோம்”என்று வினவுவதாகப் பார்கிறோம். விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நட்சத்திரம், இயேசுவின் பிறப்பைக் குறிக்கின்ற முதல் அடையாளமாகவும், கடவுள் தன் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறியதன் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இனம், மொழி, நாகரீகங்களைக் கடந்து, கிறிஸ்து உலக மக்கள் அனைவருக்காகவும் பிறந்திருக்கிறார் என்னும் நற்செய்தியை இந்நட்சத்திரம் அடையாளப்படுத்துகிறது. இவ்வாறு நட்சத்திரங்கள், கிறிஸ்து பிறப்பின் அடையாளங்களாக, வீடுகளிலும், கிறிஸ்மஸ் குடில்களிலும், கிறிஸ்மஸ் மரங்களிலும் இடம் பெற்றன.

3. கிறிஸ்துமஸ் மரம்

பண்டைய ஜெர்மானிய நாகரீகத்தில் பிற இனத்தவர் பசுமையான மரங்களை முடிவில்லா வாழ்வின் அடையாளங்களாக வழிபட்டு வந்தனர். தீய சக்திகளைத் துரத்துவதற்கு இவ்வழிபாடு பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக, சாக்சன் என்ற இனத்தைச் சார்ந்தவர்கள், தங்கள் முக்கியமான கொண்டாட்டங்களில், பசுமையான மரங்களை வழிபடுதலை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் காட்டில் உள்ள மரங்களை வழிபட்டதாகவும், பிறகு அவைகளை வெட்டி வந்து, வீடுகளில் அலங்கரித்து வைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. கி.பி. 700-ல் புனித போனிபாஸ், பிற இனத்தவராக இருந்த ஜெர்மானிய மக்களை மனம் மாற்றியதன் வழியாக, சில பிற இன வழிபாட்டு முறைகள் கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளோடு இணைந்தன.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் முதன்முதல் கிறிஸ்மஸ் மரத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்துப் பயன்படுத்தியவர் மார்ட்டீன் லூத்தர் எனச் சொல்லப்படுகிறது. ஏறத்தாழ கி.பி. 1500-ல் ஒரு கிறிஸ்மஸ் காலத்தில், பனிப்பொழிவின் மாலைவேளை, மார்ட்டீன் லூத்தர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் அழகான நட்சத்திரங்களை இரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். அவ்வேளையில், ஒரு கிறிஸ்மஸ் மரக்கூட்டத்தின் இடையே இந்த நட்சத்திரங்கள் தென்படும் அழகைப் பார்த்து வியந்தார். உடனே வீடு திரும்பிய அவர், தன் குடும்பத்தினருடன் அந்த மகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அத்தோடு நில்லாமல், விரைந்து சென்று, ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி வந்து, அதன் கிளைகளிலே சிறு மெழுகுதிரிகளை ஏற்றி, வீட்டில் அலங்கரித்து வைத்தார். அதுமுதல் ஒவ்வொரு வருடமும், அவ்வீட்டின் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்மஸ் மரம் முக்கிய பங்கு வகித்தது. காலப்போக்கில் ஜெர்மனி முழுவதுமாக, பிறகு உலகம் முழுவதுமாக, இந்த வழக்கம் இன்றளவும் இடம் பிடித்திருக்கிறது.

4. கிறிஸ்மஸ் இனிப்பு

“கிறிஸ்மஸ் கேக்” என்று பிரபலமாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் “கிறிஸ்துமஸ் இனிப்பு”ஆங்கிலேயர்களின் பண்பாட்டு வழக்கமாக இருந்தது. கிறிஸ்து பிறப்பு காலத்தில் அக்கொண்டாடத்தின் தயாரிப்பாக, அவர்கள் நாள் முழுவதும் நோன்பு இருப்பதும் அந்நாளின் இறுதியில், பழச் சாறைக்(Plum Porridge) குடித்து நோன்பை முறித்துக்கொள்வதும் அவர்களது வழக்கமாக இருந்தது. காலப்போக்கில் இந்த பழச் சாறோடு, உலர்ந்த பழங்களும் வாசனைத் திரவியங்களும், தேனும் சேர்க்கப்பட்டபோது அது “கிறிஸ்மஸ் புட்டிங்” (Christmas pudding) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற மிருதுவான ஒரு பண்டமாக உருவெடுத்தது.

16-ஆம் நூற்றாண்டில் இந்த இனிப்பின் செய்முறையில் மாற்றம் செய்யப்பட்டு வெண்ணெய், தானிய மாவு மற்றும் முட்டை சேர்க்கப்பட்டபோது அது “கேக்” என்று அழைக்கப்படுகின்ற இனிப்பாக உருமாறியது. கிறிஸ்மஸ் காலத்தில், இவை அதிகமாக உலர் பழங்களை உபயோகித்து உருவாக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டின் உணவு பழக்கத்திற்கும், சுவைக்கும் தகுந்தால்போல உருவாக்கப்படுகிறது. கிறிஸ்மஸ், வாழ்த்துக்களைப் பகிருகின்றபோது இவை பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

5. கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்புதல் என்பது, இக்கொண்டாட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக இருந்து வருகிறது. பெருவாரியாக இந்த அட்டைகள், குழந்தை இயேசு, புனித யோசேப்பு, அன்னை மரியாள், இடையர்கள், ஆடுமாடுகள் ஆகிய இவற்றை தாங்கியதாக வடிவமைக்கப்பட்டன.

1843-ல்தான் இங்கிலாந்தில் வரலாற்றில் முதன்முதலாக கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டது. John Calcott Horsley என்பவர், தனது நண்பர் Sir Henry Cole என்பவரின் ஆலோசனையின்படி, முதல் வாழ்த்து அட்டையை வடிவமைத்து தந்தார். மிகப் பெரிய தொழில் அதிபரான Sir Henry Cole, தனது ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் அதை அனுப்பி வாழ்த்து சொன்னார்.

இதில் இடம் பெற்ற காட்சியானது, இங்கிலாந்தைச் சார்ந்த ஒரு பணக்காரக் குடும்பம் சுற்றுலாவைக் கொண்டாடுவது போன்றும், அதேசமயம் மக்கள், ஏழைகளுக்கு சேவை செய்வது போன்றும் இடம்ற்றிருந்தது. கிறிஸ்துவின் பிறப்பு நம்மை, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக மாற அழைப்பு விடுக்கின்றது.

6. கிறிஸ்மஸ் தாத்தா மற்றும் பரிசுப் பொருட்கள்

கிறிஸ்மஸ் தாத்தா

கிறிஸ்மஸ் தாத்தாவையும் பரிசுப்பொருட்களையும் ஒருபோதும் வெவ்வேறாக பிரித்துப் பார்ப்பது இயலாத ஒன்று. கிறிஸ்மஸ் தாத்தாவின் அடையாளமே பரிசுப் பொருட்கள்தான். புனித நிக்கோலஸ்தான், கிறிஸ்மஸ் தாத்தாவாக அறியப்பட்டவர். நிக்கோலஸ் துருக்கி நாட்டில் “பாரா” என்ற இடத்தில், ஏறத்தாழ கி.பி. 270-ல் பிறந்தார். அவர் “மிரா” (Myra) நகரின் 4வது ஆயராக இருந்தார். அவர் ஏறத்தாழ கி.பி. 345-ல் இறந்திருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. அவர், டிசம்பர் 6-ம் நாள் இறந்தார். ஆனால் அவர், 19-ம் நூற்றாண்டில்தான் புனிதராக உயர்த்தப்பட்டார். அவரது உடல் இத்தாலி நாட்டின் “பாரி” (Bari) என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. புனித நிக்கோலஸ் ஏழைகளுக்கு வாரி வழங்கும் குணம் படைத்தவராக இருந்தார். ஆனால், “உனது வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும்(மத்.6:3-4)”என்ற இறைவார்த்தையின் அடிப்படையில், அவர் முகம் தெரியாத மனிதராகவே, தனது தாராள குணத்தை வெளிப்படுத்தி வந்தார். அவரைப் பற்றி மிகப் பிரபலமாக அறியப்படுக்கின்ற கதை ஒன்று உண்டு. அவர் ஒருநாள் இரவு வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த ஒரு குடும்பத்தின் நிலையை அறிந்து கொள்கிறார். அந்தக் குடும்பத்தின் மூன்று இளம் பெண்கள் திருமணம் செய்ய முடியாத நிலையில், விபசாரம் செய்து பிழைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட வேளையில், புனித நிக்கோலஸ் அதை அறிந்து, மூன்று பொற்கிழிகளை இரவு வேளையில் அவர்கள் வீட்டில் எறிந்துவிட்டு மறைந்து விடுகிறார். அவர்கள் தங்கள் எண்ணங்களை கைவிட்டு மணம் முடித்து வாழ வழி செய்கிறார். இவ்வாறு கிறிஸ்மஸ் தாத்தா கிறிஸ்மஸ் காலத்தில், சிவப்பு நிற ஆடை அணிந்து பரிசு கொடுப்பவராக உலகெங்கும் அறியப்படுகிறார்.

பரிசுப் பொருட்கள்

பரிசுப் பொருட்கள் வழங்குதல் என்பது, கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவுக்கு பரிசுகளாக, பொன், தூபம், வெள்ளைப்போளம் போன்றவற்றை வழங்கினார்கள். பொன், “கிறிஸ்து அரசர்”என்பதையும், தூபம், “கிறிஸ்து இறைமகன்”என்பதையும், வெள்ளைப்போளம், “கிறிஸ்துவின், இறப்பு உயிர்ப்பு” ஆகியவற்றையும் குறிக்கின்றன. இதுவே தொடக்கமாக அமைகின்றது. இறைவனைத் தரிசிக்க வந்த ஞானிகள், இன்றைய மத்திய கிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. அவர்கள் மூன்று ஞானிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றபோது அவர்கள் எத்தனை பேர் என்பது விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் கொண்டுவந்த பரிசுப் பொருட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் மூன்று பேர் என்று சொல்லப்படுகிறது.

பரிசு பொருட்கள் வழங்குதல் என்பது, கிறிஸ்தவக் காலகட்டத்திற்கு முந்தைய உரோமைய வழக்கமாக இருந்தது. உரோமையரின் முக்கியமான விழாக்களில் உரோமைப் பேரரசர்கள், தங்கள் குடிமக்களை, பரிசுப்பொருட்களைக் கொண்டுவருமாறு ஆணையிட்டு, அதைப் பழக்கப்படுத்தினர். இந்த வழக்கம் பிற்காலத்தில், ஒரு முக்கியமான வழக்கமாக, கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றிலும் இடம்பெறத் துவங்கியது. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலும் அவ்வாறே இடம் பிடித்தது.

இவ்வடையாளங்கள் இல்லாமல், “கிறிஸ்மஸ்”இல்லை என்று சொல்லப்படும் அளவிற்கு, இவை நமது கொண்டாட்டங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. பாலன் இயேசுவின் பிறப்பு, நம்மை அன்பிலும் அமைதியிலும் நிறைப்பதாக(அ.பணி விமல் ஆரோக்யராஜ், சுல்தான் பேட்டை மறைமாவட்டம்).

ஆதாரம் : வத்திக்கான் வானொ








All the contents on this site are copyrighted ©.