2016-12-21 14:37:00

மறைக்கல்வியுரை: இவ்வுலகிற்கான நம்பிக்கையின் வரவாக கிறிஸ்மஸ்


டிச.,21,2016. வரவிருக்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு, அதாவது,  இயேசுவின் வருகைக்கு தயாரிக்க நமக்கு உதவும் இறைவாக்கினர் எசயாவின் வார்த்தைகளை மையமாக வைத்து  தன் சிந்தனைகளைக் கடந்த வாரத்தின் மறைக்கல்வி உரையில் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகிற்கான நம்பிக்கையின் வரவாக கிறிஸ்மஸ் மறையுண்மையை ஆழ்ந்து தியானிப்போம் என இவ்வாரம் தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி, திருவருகைக்காலத்தின் இந்த இறுதி நாட்களில், கிறிஸ்மஸ் மறையுண்மையை, இவ்வுலகிற்கான நம்பிக்கையின் வருகையாக தியானிக்க வழிநடத்திச் செல்கின்றது. தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, கன்னிமரியாவிடம் தன் மகன் பிறப்பெடுக்க வைத்ததன் வழியாக, இவ்வுலகில் தன் அரசாட்சியை நிலைநாட்டியதுடன், முடிவற்ற வாழ்வை நோக்கி நம் நம்பிக்கைகளையும் திசை திருப்பினார். இந்த நம்பிக்கையானது, உண்மைத்தன்மையுடையது மட்டுமல்ல, நம்பகத்தன்மையும் கொண்டது. இந்த நம்பிக்கையானது, மீட்டு காப்பாற்றுகிறது. ஏனெனில், மனித உடலெடுத்து வந்ததன் வழியாக, இயேசு, தந்தையாம் இறைவனை நோக்கிச் செல்லும் வழியை நமக்குத் திறந்துள்ளார். இந்த நாட்களில் கிறிஸ்மஸ் குடிலை நம் வீடுகளிலும் கோவில்களிலும் அமைக்கும்போது, அந்தக் குடில் தன்னுள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் செய்தி குறித்து கவனமுடன் செவிமடுபோம். நாம் எவ்வளவு சிறியவர்களாக, தாழ்நிலையுடையவர்களாக இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அன்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதை பெத்லேகம் என்ற சிற்றூரில் நாம் பார்க்கிறோம். இறைவார்த்தையில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்த அன்னை மரியா அவர்களில் நாம் நம்பிக்கையின் அன்னையைக் காண்கிறோம். புனித யோசேப்பும், நம்பிக்கையின் மனிதரே, அவரே இயேசுவுக்கு அப்பெயரை இட்டார். அதற்கு, 'இறைவன் மீட்பளிக்கிறார்' என்று பொருள். வானதூதர்களால் அறிவிக்கப்பட்ட அமைதியின் செய்தி, இடையர்களால், மகிழ்வுடன் செவிமடுக்கப்பட்டது. இறை மீட்பரின் பிறப்புக் குறித்த நற்செய்திக்கு நம்மைத் திறந்தவர்களாக இருந்து, அவர் கொண்டுவந்த புனிதத்துவம், அமைதி மற்றும் நீதியின் அரசைக் குறித்த நம் நம்பிக்கையை புதுப்பிப்போமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் தான் காங்கோ சனநாயக குடியரசின் ஆயர் பேரவைத் தலைவருடனும், துணைத்தலைவருடனும் மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்து எடுத்துரைத்தார். வரலாற்றின் இந்த முக்கியமான நேரத்தில் காங்கோ நாட்டு மக்கள், அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  மக்களின் துன்பங்களைக் காணும் அரசியல் தலைவர்கள், தங்கள் மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுத்து, பொதுநலனுக்காக உழைக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

மேலும், இந்த மறைக்கல்வி உரையின்போது, உரோம் நகரின் ரொட்டித் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒன்றரை மீட்டர் உயரம் கொண்ட ரொட்டியாலான கிறிஸ்மஸ் குடில் ஒன்றைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். அவர்களுக்கு நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.