2016-12-21 15:35:00

போர்கள், மனித வர்த்தகத்தை வளர்க்கும் முக்கியக் காரணி


டிச.21,2016. நல்மனம் கொண்டோர் அனைவரும், அவர்கள் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மனித வர்த்தகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா.அவை தலைமையகக் கூட்டங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்த்தித்தோ அவுசா அவர்கள், ஐ.நா. பாதுகாப்பு அவையில், இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

"அகில உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுதல்: மோதல்கள் நிகழும் சூழல்களில் மனிதர்கள் வர்த்தகம்" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதங்களில் கலந்துகொண்ட பேராயர் அவுசா அவர்கள், மனித வர்த்தகத்தை முற்றிலும் ஒழிப்பது, திருப்பீடத்தின் தலையாய பணிகளில் ஒன்று என்று தன் உரையில் கூறினார்.

"அடுத்தவரும் என்னைப்போலவே வாழ உரிமை பெற்றவர்" என்ற அடிப்படை உண்மையை ஏற்க மறுப்பவர்கள் குற்றவாளிகள், ஏனெனில், இவர்களே மற்றவரின் உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை, பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

மத, இன, மொழி, பாலின அடிப்படையில் ஒதுக்கப்படுதல், வறுமை, வேலையற்ற சூழல், போன்ற காரணங்கள் பல்வேறு நவீன அடிமைத்தனங்களை வளர்க்கின்றன என்று சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், இந்தக் குற்றத்தை ஒழிப்பதற்கு, முழுமையான சமுதாய மாற்றம் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

நவீன அடிமைத்தனத்திற்கு பல்வேறு காரணங்கள் நிலவினாலும், போர்களும், உள்நாட்டு மோதல்களும் மனித வர்த்தகத்தை வளர்க்கும் ஒரு முக்கியக் காரணி என்பதை பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.