2016-12-21 15:20:00

சென்னையில் தூவ 30,000 நாட்டுமர விதைப் பந்துகள் தயார்


டிச.21,2016.‘வார்தா’ புயலால் சுமார் 30 ஆயிரம் பெரிய மரங்களை சென்னை இழந்திருக்கும் நிலையில் இங்குள்ள தரிசு நிலங்களிலும் காப்புக் காடுகளிலும் விதைப் பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளது, தாம்பரம் மக்கள் குழு.

என்றாவது ஒருநாள் உதவும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்தக் குழுவினர் பல்வேறு நாட்டு மரங்களின் விதைகளை முன்னெச்சரிக்கையாக சேகரித்து சுமார் 30 ஆயிரம் விதைப் பந்துகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

மென்பொருள் துறை உட்பட பல்வேறு துறைகளில் பணிபுரியும் இளைஞர்களை உள்ளடக்கிய தாம்பரம் மக்கள் குழு, நீர் நிலைகளை பராமரிப்பது, இயற்கை விவசாயத்துக்கு ஆதர வாக குரல் கொடுப்பது, மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட களங்களில் செயல்பட்டு வருகிறது.

இக்குழுவைச் சார்ந்தவர்கள் டிசம்பர் 25, வரும் ஞாயிறன்று சென்னையின் தரிசு நிலங்கள், புறநகரின் காப்புக்காடுகள் ஆகிய பகுதிகளில் விதைப் பந்துகளை தூவ திட்டமிட்டுள்ளனர்.

பாரம்பரிய நாட்டு மரங் களான சரக்கொன்றை, மகிழம், குன்றிமணி, புங்கன், பூவரசு, பூனைத்தாளி, புளியம், கல்யாண முருங்கை உள்ளிட்ட மரங்களின் விதைகளை கடந்த இரு ஆண்டுகளாகவே சேகரித்து, விதைப் பந்து தயாரித்துள்ளதாக, தாம்பரம் மக்கள் குழுவின் உறுப்பினரான ஜனகன் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், ஜனகன் அவர்கள் கூறிய விவரங்கள்:

இந்த விதைப் பந்துகளை மழைக் காலத்துக்கு முன்பாக தரிசு நிலங்களிலும் காடுகளிலும் போட்டால், மழை பொழியும்போது இவை மண்ணோடு மண்ணாக கரைந்து செடிகளும் மரங்களும் இயல்பாக முளைக்கும்.

பொதுவாக ஒரு தாவரம் விதையாக தூவப்பட்டு இயல்பாக முளைக்கும்போது மண்ணில் விதையின் ஆணி வேர் செங்குத்தாக ஊடுருவிச் சென்று, அந்த மரம் எவ்வளவு உயரமாக பூமியின் மேற்பரப்பில் வளர்கிறதோ அவ்வளவு உயரத்துக்கு பூமிக்கு கீழே ஆணி வேர் ஊடுருவும்.

ஆனால், சிறு பிளாஸ்டிக் பைகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளின் வேர்கள் நேராக அல்லாமல் வளைவாகவும் சுருண்டும் இருக்கும். அந்தக் கன்றுகளை மண்ணில் நட்டால் அவற்றின் வேர்கள் பூமியை ஆழமாக ஊடுருவிச் செல்லாமல் பக்கவாட்டிலேயே செல்லும். இதனாலேயே தெருக்களிலும் வீடுகளிலும் நடப்படும் மரங்கள் புயலில் விழுந்துவிடுகின்றன. அதேசமயம் காடுகளில் இயற்கையான விதைப் பரவல் மூலம் வளரும் மரங்கள் உறுதியாக இருக்கின்றன.

ஜனகன் அவர்கள் தாம்பரம் மக்கள் குழவின் செயல்பாடுகள் குறித்து பேசுகையில், கடந்த இரு ஆண்டுகளாகவே தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று விதைப் பந்துகள் உருவாக்குவது குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

தற்போது சேகரித்து, தயார் நிலையில் வைத்துள்ள விதைப் பந்துகளை, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், திரிசூலம் உட்பட சென்னையின் புறநகரிலிருக்கும் காப்புக்காடுகளில் தூவ இருக்கிறோம். வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க, இளைஞர்கள் முன்வர வேண்டும். அன்றைய தினம் விதைப் பந்து உருவாக்குவது குறித்த பயிற்சியும் அளிக்கப்படும் என்று  கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.