2016-12-21 15:21:00

இஸ்லாமிய சமுதாயம் முழுவதையும் கண்டனம் செய்வது தவறு


டிச.21,2016. ஜெர்மனி நாட்டில், பெர்லின் கிறிஸ்மஸ் கடைத்தெருவில் நிகழ்ந்த வன்முறை, நம்மில் உருவாக்கியுள்ள அதிர்ச்சியையும் கடந்து, உரையாடல் முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நவம்பர் 19, திங்கள் இரவு, பெர்லின் நகரின் கடைத்தெருவில் கனரக வாகனம் ஒன்றை கண்மூடித்தனமாக ஒட்டி 12 உயிர்களை பலிவாங்கிய நிகழ்வையொட்டி, திருப்பீட பல் சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டி, "உரையாடல், பலமற்ற நிலை அல்ல" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு ஜூலை மாதம், பிரான்ஸ் நாட்டின் நீச்சே நகரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதல் போலவே, பெர்லின் தாக்குதலும் நிகழ்ந்துள்ளது என்று, தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய கர்தினால் Tauran அவர்கள், கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள், கிறிஸ்தவ விழாக்கள் இவற்றை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், உரையாடல் பாதையிலிருந்து நம்மை திசை திருப்பக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வன்முறைகளில் ஒரு சில இஸ்லாமியர் ஈடுபட்டிருப்பதால், இஸ்லாமிய சமுதாயம் முழுவதையும் கண்டனம் செய்வது தவறு என்றும், அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள் கொலையுண்டதை, இஸ்லாமிய சமுதாயம் வன்மையாகக் கண்டனம் செய்தது என்றும், கர்தினால் Tauran அவர்கள், தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

இஸ்லாமிய அறிஞர்கள் பலர் இவ்வாண்டு வத்திக்கானுக்கு வருகைதந்து, திருத்தந்தையைச் சந்தித்ததோடு, பல உரையாடல் கருத்தரங்குகளிலும் பங்கேற்றனர் என்பதை தன் பேட்டியில் நினைவுகூர்ந்த கர்தினால் Tauran அவர்கள், உரையாடல் தடைபட்டால், வன்முறை வளரும் என்று எச்சரித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.