2016-12-20 14:27:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 52


கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கி வந்துள்ளோம். இவ்வேளையில் உறவினர்கள், நண்பர்களுடன் நாம் மேற்கொள்ளும் சந்திப்புக்களை, இந்த விவிலியத் தேடலின் துவக்கத்தில், சிறிது கற்பனை செய்து பார்க்க உங்களை அழைக்கிறேன். நம் இல்லம் தேடிவரும் உறவினர்கள், நண்பர்களை வரவேற்று, விருந்து படைத்து, சில மணி நேரங்கள் அவர்களோடு செலவழிப்போம். அவர்கள் நம்மிடமிருந்து விடைபெறும் வேளையில், நாம் வாசல்வரை சென்று வழியனுப்பி வைப்போம். வீட்டிற்குள் எவ்வளவுதான் பேசியிருந்தாலும், அந்த இறுதி சில மணித்துளிகள் வாசலில் மீண்டும் சில பரிமாற்றங்கள் நடைபெறும். நமது உறவும், அதனால் வரும் மகிழ்வும், இனி வரும் நாட்களிலும் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில், வாசலில் பரிமாற்றங்கள் நிகழும். முக்கியமாக, அடுத்த சந்திப்பைப் பற்றிய திட்டங்கள் அங்கு பேசப்படும். பலசமயம், அந்த இறுதித் தருணங்களில், பரிசுகளும் பரிமாறப்படுவதுண்டு. அவ்வேளையில், நம் வாசல் கதவு, குறிப்பாக, அக்கதவு, தானியங்கி கதவாக இருந்தால், அது திறந்தே இருக்கும் வண்ணம், அதனருகே நம் பாதத்தை வைத்தபடி பேசிக்கொண்டிருப்போம்.

இதையொத்த ஓர் அழகியச் செயலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டின் இறுதியில் செய்துள்ளார். திருஅவை என்ற இல்லத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டாடிய யூபிலி ஆண்டின் இறுதியில், நாம் புறப்பட்ட நேரத்தில், திருத்தந்தை வாசல் வரை வந்து, இந்த யூபிலி அனுபவம் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திருத்தூது மடலை நமக்கு பரிசாக அளித்துள்ளார்.

“Misericordia et Misera” அதாவது, "இரக்கமும் அவலநிலையும்" என்ற பெயரில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடலைப் பற்றி பல செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றில், ஒரு செய்தியின் தலைப்பு, வாசல்வரை வந்து நம்மை வழியனுப்பி வைக்கும் திருத்தந்தையைச் சித்திரிக்கிறது. AgenSIR என்ற இத்தாலிய, கத்தோலிக்க வலைத்தளத்தில், நவம்பர் 22ம் தேதி, திருத்தூது மடலைப் பற்றி வெளியான செய்திக்கு, Pope Francis places his foot on the threshold of our hearts to keep it open அதாவது, "நம் இதயக்கதவு திறந்தவண்ணம் இருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாதத்தை கதவு நிலையில் வைத்துள்ளார்" என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொணர்ந்தார். இந்த யூபிலி ஆண்டையொட்டி உலகெங்கும் திறக்கப்பட்டிருந்த பல்லாயிரம் புனிதக் கதவுகளில் இறுதிக் கதவாக, புனித பேதுரு பசிலிக்காவின் முகப்பில் இருந்த புனிதக் கதவை, திருத்தந்தை மூடினார்.

இதைத் தொடர்ந்து, புனித பேதுரு வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில், "இரக்கமும் அவலநிலையும்" என்று தலைப்பிடப்பட்ட திருத்தூதுமடலை வெளியிட்டார். புனிதக் கதவுகள் மூடப்பட்டாலும், இரக்கத்தின் யூபிலி ஆண்டு முடிவடைந்திருந்தாலும், இதயக் கதவுகள் திறந்திருக்க வேண்டும்; இரக்கம் நம் வாழ்வில் தொடரவேண்டும் என்பதை, இந்த யூபிலி ஆண்டின் இறுதி நாட்களில், திருத்தந்தை, பலமுறை கூறியுள்ளார். இந்த எண்ணத்தின் வெளிப்பாடாக, திருத்தந்தை, திருத்தூது மடலை வெளியிட்டது, அவர், வாசல் வரை வந்து, கதவு நிலையில் கால் வைத்து நின்று, நமக்கு பரிசளிக்கிறார் என்ற உருவகத்தை நினைவுக்குக் கொணர்கிறது.

திருஅவை வரலாற்றில், திருத்தந்தையர், எழுத்து வடிவில் வெளியிடும் கருத்துக்களில், திருத்தூது மடல் முக்கியமான ஒன்று. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய 'இரக்கமும் அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டது. கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், இதற்கு முந்தைய யூபிலி, 2001ம் ஆண்டு, சனவரி 6ம் தேதி நிறைவுற்றபோது, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், "Novo Millennio Ineunte", அதாவது, "புதிய மில்லென்னியத்தின் துவக்கத்தில்" என்ற தலைப்பில், திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டார். 21ம் நூற்றாண்டு, அல்லது, 3வது மில்லென்னியம் என்று அழைக்கப்படும், புதிய மில்லென்னியத்தின் துவக்கத்தில், திருஅவை மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றி, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.

புதிய மில்லென்னியத்தில் திருஅவை, தன் பணிகளை துணிவுடன் மேற்கொள்ள, இன்னும் ஆழத்திற்குச் செல்லவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்வை (லூக்கா 5:1-5) திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். கெனசரேத்து ஏரிக்கரையில் தன்னை நெருக்கிய மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, ஏரியில் நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் ஏறி, இயேசு மக்களுக்கு கற்பிக்கிறார். கற்பித்து முடிந்ததும், சீமோனிடம் ஒரு புதிரான கட்டளையிடுகிறார் இயேசு. அந்த மீனவர்களை, பகல் நேரத்தில் மீன்பிடிக்கும்படி பணிக்கிறார். "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" (லூக்கா 5:4) என்று இயேசு கூறிய அந்தக் கட்டளையை மையமாகக் கொண்டு, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், இத்திருத்தூது மடலில் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பொதுவாகவே, திருத்தந்தையர் வெளியிடும் திருத்தூது மடல்கள், இறையியல் கருத்துக்களையும், மறையுண்மை விளக்கங்களையும் வழங்கும் ஏடுகளாக இருப்பதில்லை. மாறாக, இறைமக்களை, செயல்களுக்கு வழிநடத்திச்செல்லும் அறிவுரை மடல்களாக இருக்கும். புதிய ஏற்பாட்டில், பவுல், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய அனைத்துத் திருத்தூதர்கள் எழுதியுள்ள மடல்களையும் வாசித்தால், அவற்றில், நடைமுறை வாழ்வுக்குத் தேவையான அறிவுரைகளே அதிகம் உள்ளன. இந்த வழிமரபில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இரக்கமும், அவலநிலையும்' என்ற திருத்தூது மடல், இரக்கத்தின் இலக்கணம், பண்புகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு கருத்துத் தொகுப்பாக இல்லாமல், நிறைவுற்ற யூபிலியின் தொடர்ச்சியாக, நாம் மேற்கொள்ளவேண்டிய இரக்கப்பணிகள் பற்றிய ஓர் அழைப்பாக அமைந்துள்ளது. இத்திருத்தூது மடலும், யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமாகிறது.

விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண், இயேசுவுக்கு முன் கொண்டுவரப்பட்ட நிகழ்வை (யோவான் 8:1-11) தன் திருத்தூது மடலின் ஆரம்பமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்துள்ளார். இந்த நற்செய்திப் பகுதியைக் குறித்து புனித அகஸ்டின் வழங்கிய ஒரு மறையுரையில், இந்நிகழ்வின் இறுதியில், அப்பெண் மீது குற்றம் சுமத்திய கூட்டம் அனைத்தும் கலைந்தபின், அங்கு, இயேசுவும், அப்பெண்ணும் மட்டுமே இருந்தனர் என்பதைக் குறிப்பிட, "அவர்கள் இருவர் மட்டுமே அங்கிருந்தனர்: இரக்கமும், அவலநிலையும்" என்று, அச்சூழலை அழகாக விவரித்துள்ளார். புனித அகஸ்டின் கூறிய இந்தக் கூற்றிலிருந்து, "இரக்கமும் அவலநிலையும்" என்ற சொற்களைத் தான் தேர்ந்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலின் துவக்கத்தில் கூறியுள்ளார்:

"விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசு சந்தித்த நிகழ்வைக் கூறும் புனித அகஸ்டின், 'இரக்கமும், அவலநிலையும்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். இறைவனின் அன்பு, ஒரு பாவியை எவ்விதம் தொடுகிறது என்ற மறையுண்மையை விவரிக்க, 'இரக்கமும் அவலநிலையும்' என்று புனிதர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளைவிட இன்னும் அழகாக யாராலும் சொல்லமுடியாது. இரக்கமும், தெய்வீக நீதியும் இந்நிகழ்வில் வெளிப்படுகின்றன. இரக்கத்தின் சிறப்பு யூபிலியின் நிறைவைக்குறித்து மட்டுமல்ல, வருங்காலத்தில் நாம் செல்லவேண்டிய பாதையைக் குறித்தும், இந்நிகழ்வு பாடம் சொல்லித்தருகிறது" என்ற வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருத்தூது மடலை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, திருத்தந்தை கூறும் வார்த்தைகள், திருஅவையில் இரக்கம் தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்பதை, மிகத் தெளிவாகக் கூறியுள்ளன.

“இரக்கம் நிறைந்த ஒரு காலமாக, இந்தப் புனித ஆண்டு கொண்டாடப்படுவதற்கும், இரக்கம் இனியும் நம் வாழ்வில் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கும், நற்செய்தியின் இந்நிகழ்வு ஓர் அடையாளமாக உள்ளது.

இரக்கம் நிறைந்து வழிந்த காலமாக அமைந்த இந்தப் புனித ஆண்டு, தொடர்ந்து நம் சமுதாயத்தில் கொண்டாடப்படவேண்டும். திருஅவை வாழ்வில், இரக்கம், ஓர் அடைப்புக்குறிக்குள் சிக்கிக்கொண்ட இடைச்செறுகலாக மாறிவிட முடியாது. நற்செய்தியின் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தி, திருஅவையின் உயிர் துடிப்பாக இரக்கம் உள்ளது” என்று, திருத்தந்தை ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஆணித்தரமான இந்த அழைப்பைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் பிடிபட்ட அந்தப் பெண்ணை இயேசு சந்திக்கும் நிகழ்வுக்கு, தனக்கே உரிய பாணியில் விளக்கம் தந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அவர் கூறியுள்ள விளக்கத்தில், ஒரு சில கருத்துக்கள் நம் இதயத்தைத் தொடுகின்றன:

“இந்த நற்செய்தி பகுதி, பாவத்திற்கும், தீர்ப்பிற்கும் இடையே நிகழும் கருத்து சந்திப்பு அல்ல; மாறாக, ஒரு பாவிக்கும், மீட்பருக்கும் இடையே நிகழும் சந்திப்பு... அந்தப் பெண்ணின் பாவம் என்ற அவலம், இரக்கம் நிறைந்த அன்பால் உடுத்தப்பட்டது... அந்தப் பெண்ணைக் கண்டனம் செய்து தீர்ப்பு வழங்க விரும்பியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இயேசு ஒரு நீண்ட மௌனத்தைப் பதிலாகத் தந்தார். அவர் இவ்வாறு செய்ததற்குக் காரணம், அந்த மௌனத்தின் வழியே, அந்தப் பெண்ணின் உள்ளத்திலும், அவரை தண்டிக்கத் துடித்த மற்றவர் உள்ளங்களிலும் இறைவனின் குரல் ஒலிக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். எனவே, மௌனம் காத்தார். ‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம், இனிப் பாவம் செய்யாதீர்’ (யோவான் 8:11) என்று இயேசு கூறும்போது, அந்தப் பெண், தன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கவும், ஒரு புதிய வாழ்வைத் தொடரவும் உதவி செய்கிறார்.”

22 பகுதிகள் கொண்ட இத்திருத்தூது மடலில், திருத்தந்தை கூறும் கருத்துக்களை, குறிப்பாக, அவர் பரிந்துரைக்கும் செயல் திட்டங்களை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.