2016-12-20 16:34:00

வாழ்வுக்கு ஆதரவான சட்டம் காப்பாற்றிய 20 இலட்சம் உயிர்கள்


டிச.,20,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவான Hyde சட்ட திருத்தம் இடம்பெற்ற பின்னான கடந்த 40 ஆண்டுகளில் 20 இலட்சம் குழந்தைகள் வரை கருவிலேயே காப்பாற்றப்பட்டிருப்பதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

கருக்கலைத்தலுக்கு உதவ மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படக்கூடாது என காங்கிரஸ் அவை உறுப்பினர் Henry Hyde என்பவர் முன்மொழிந்து, 1976ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட திருத்தத்தின் வழியாக 20 இலட்சம் கருக்கலைத்தல்கள் தடுக்கப்பட்டு, உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என வாழ்வு ஆதரவுக் குழுக்கள் அறிவித்துள்ளன.

வாழ்வுக்கு ஆதரவாக இந்த சட்டம் நடைமுறையில் இல்லையெனில் கடந்த 40 ஆண்டுகளில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைத்தல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற வாழ்வுக்கு ஆதரவான அமைப்பான Charlotte Lozier நிறுவனம், இந்த சட்ட திருத்தத்திற்குப்பின் கருக்கலைத்தல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருவில் வளரும் குழந்தையைக் கொல்வதற்கு மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படக்கூடாது, அதாவது, கருக்கலைத்தலுக்கு அரசு நிதியுதவி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஆதரவு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்:EWTN /CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.