2016-12-20 16:57:00

மக்கள் நலனில் அக்கறை காட்ட வெனிசுவேலா திரு அவை விண்ணப்பம்


டிச.,20,2016. வெனிசுவேலா அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிகள், நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் சீர்கேடான வகையில் ஆழப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

நாட்டின் பொருளாதார நிலைகளையும் மக்களின் துன்பங்களையும் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட ஆயர்கள், பணவீக்கம் அதிகரித்துள்ளது, உணவுக்கும் மருந்துக்கும் மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பது, அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை ஆகியவற்றை நேரடியாகக் காணும் அரசு, அவற்றை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

மக்களின் பிரச்னைகளை அரசு புரிந்துகொள்ளவேண்டும் என விண்ணப்பிக்கும் வெனிசுவேலா ஆயர்கள், உதவித் தேவைப்படுபவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து அவர்களுடன் தங்கள் உணவையும் ஏனைய பொருட்களையும் பகிர்ந்துகொள்ள கத்தோலிக்கர்கள் முன்வரவேண்டும் என கேட்டுள்ளனர்.

பெரும் பொருளாதர நெருக்கடியின் காரணமாக ஏற்கனவே, மருந்துகளும் உணவுப்பொருட்களும் இன்றி தவித்து வரும் வெனிசுவேலா நாட்டில், உயர் மதிப்புடைய 100-பொலிவர் என்ற பணம் செல்லாது என அரசுத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து, நிலைமை மிகவும் சீர்கேடடைந்தது. போதிய மாற்று பணத்தை அச்சடிக்காமலேயே, 100-பொலிவர் நோட்டுச் செல்லாது என அரசு அறிவித்தபின், எதிர்ப்பு வலுப்பெற்றதைத் தொடர்ந்து,  இந்த அறிவிப்பை சனவரி 2ம் தேதி வரை தள்ளிப்போட்டுள்ளது அரசு.

ஆதாரம்: CWN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.