2016-12-20 16:43:00

பாகிஸ்தானில் 10இலட்சம் மரங்களை நடுவதற்கு, காரித்தாஸ் திட்டம்


டிச.20,2016. பாகிஸ்தானில் பத்து இலட்சம் மரங்களை நடுவதற்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறதென்று, UCA செய்தி நிறுவனம் கூறியது.

உலகில், காலநிலை பாதிப்பின் அதிகமான எதிர்விளைவுகளை அனுபவிக்கும் நாடுகளில், எட்டாவது இடத்திலுள்ள பாகிஸ்தானில், காலநிலை பாதிப்பின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், பத்து இலட்சம் மரங்களை நடுவதற்கு, திட்டமிட்டுள்ளது காரித்தாஸ் நிறுவனம்.  

காரித்தாஸ் பிறரன்பு நிறுவனத்திற்கு, பஞ்சாப் வனத்துறை, 75 விழுக்காடு தள்ளுபடியில் மரக்கன்றுகளை விற்பதற்கு ஏற்கனவே உறுதியளித்திருப்பதாகவும், இந்நிறுவனத்தின் நலன்விரும்பிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன், மூன்றாண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் பற்றிக் கூறிய, பாகிஸ்தான் காரித்தாஸ் நிறுவன செயல்திட்ட இயக்குனர் Amjad Gulzar அவர்கள், மரங்களை நடுவது மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாத்து வளர்க்கவும் மக்களுக்குப் பயிற்சியளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், ஒலிவ மரக்கன்றுகளை நட்டுவைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.