2016-12-19 14:40:00

வாரம் ஓர் அலசல் – கிறிஸ்மஸ் தயாரிப்பு


டிச.19,2016. இந்நாள்களில், நாடுகளிலும், நகரங்களிலும், பளிச் பளிச்சென்று எரியும் பலவண்ண, பலவடிவ மின்விளக்குகள், கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வருவதை நமக்குக் காட்டுகின்றன. ஆனால், புலம்பெயர்ந்தவர் முகாம்களில், சிரியாவின் அலெப்போ உட்பட, போர் இடம்பெறும் இடங்களில், மின்விளக்குகளுக்குப் பதில், குண்டுமழையின் தீச் சுடர்களும், வேதிய நச்சுப் புகைகளும் நிறைந்துள்ளன. அலெப்போவில், கடந்த வாரத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்தம் காரணமாக, மக்களை வெளியேற்றுவதற்குச் சென்ற பேருந்துகளை, ஐ.எஸ். தீவிரவாதிகள், தீ வைத்து எரித்து விட்டதாக, இஞ்ஞாயிறு செய்திகள் கூறின. எனினும், இப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இத்திங்கள் காலையில், ஏறக்குறைய மூவாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் கூறுகின்றன. இம்மக்களில், Bana Alabed என்ற, ஏழு வயது சிறுமியும் ஒருவர். இச்சிறுமி, அலெப்போவின் நிலைமையை டுவிட்டரில் வெளியிட்டு வந்தவர். துன்பச் சூழல்களில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸை எப்படிக் கொண்டாடுவார்கள்? ஆயினும், 25 வயது நிரம்பிய கிறிஸ்டினா ஷாபோ(Christina Shabo) என்ற, ஓர் ஈராக்கிய கிறிஸ்தவ இளம்பெண், இறைவா, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது இரக்கம் வையும் என்று, பல்லாயிரக்கணக்கான இளையோர் மத்தியில் செபித்திருப்பது, குழந்தை வடிவில் பிறந்த இறைமகன் இயேசுவின் விழுமியங்களை, வாழ்ந்து வருவதை உணர முடிந்தது. ஷாபோ இவ்வாறு தொடர்ந்து செபித்தும் வருகிறார் என்று, ஓர் ஊடகத்தில் வாசித்தோம். இவரின் குடும்பம், 1991ம் ஆண்டில், வளைகுடா சண்டையின்போது, ஈராக்கை விட்டு வெளியேறியது. அப்போது ஷாபோ, அவரின் தாய் வயிற்றில், எட்டுமாதக் கரு.

ஈராக்கில், ஷாபோ அவர்களின் குடும்பத்தோடு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், கடுமையான மலைப்பாதைகளைக் கடந்து துருக்கியை அடைந்தனர். இவரது மாமா மகளான எட்டு வயது நிரம்பிய ரீட்டா உட்பட பலர், வழியில் இறந்தனர். ஆனால், இவரது மாமா, இறந்த தனது மகளை அந்த இடத்திலே புதைக்காமல், தோளில் சுமந்துசென்று, துருக்கியில், முகாமில் ஒரு மரத்திற்கடியில் புதைத்தார். இது நடந்து ஒரு மாதம் சென்று, அதே மரத்தடியில், ஷாபோவின் அன்னை, அவரைப் பெற்றெடுத்தார். 2014ம் ஆண்டில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசு, தீவிரமாக போரில் ஈடுபட்ட பின்னர், அந்த அரசால், ஷாபோவின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஓர் உறவினரின் உடல் துண்டு துண்டாக, ஒரு துணியில் கட்டப்பட்டு, அவரின் குடும்பத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷாபோவின் உறவினர்களில் பலர், இன்னும், கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாபோ சொல்கிறார்..

தனது குடும்பத்தையும், தன் மக்களையும் துன்புறுத்தும் ஐ.எஸ். ஆள்களை மன்னிப்பதற்கு மனது வரவில்லை. நான் என்னோடு போராடினேன். மன்னிப்பதற்கு சக்தி கேட்டுச் செபித்தேன். ஐ.எஸ். இஸ்லாமிய அரசை வெறுப்பதற்குப் பதில், அவர்களின் மனம் மாறுவதற்காகச் செபிப்பதற்குத் தீர்மானித்தேன். இயேசுவே, ஐ.எஸ். மீதும், உலகின் மீதும் இரக்கம் வையும் எனச் செபித்தேன், செபிக்கின்றேன். கோபம், மேலும் கோபத்தையும், கசப்புணர்வையுமே உருவாக்குகின்றது. அதிலிருந்து நன்மை எதுவும் வருவதில்லை. ஆனால், அக்கோபத்தை, கருணை மற்றும் மன்னிப்பாக மாற்றும்போது, நல்ல பலன்கள் கிடைப்பதை உணருகிறேன் என்று, ஒரு கத்தோலிக்க ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார் ஷாபோ.

கடந்த வாரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கப்பற்படை மற்றும் விமானப்படை கால்பந்து அணிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டியின்போது, அங்கு ஓரிடத்தில், முழந்தாள்படியிட்டு, ஒருவர் பக்தியுடன் செபமாலை செபித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று, நீங்கள் யார், எதற்காகச் செபிக்கின்றீர்கள் என, ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு அவர், நான் இராணுவ ஆன்மீக அருள்பணியாளர் Matthew Pawlikowski என்றும், இந்த இரு அணிகளுக்காகவும் செபித்துக்கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். இந்த இரு அணிகளிலும் யாருக்கும் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது எனவும், அவர்களின் தூய்மை வாழ்வு மற்றும் மீட்புக்காகச் செபிக்கின்றேன் எனவும் கூறினார்.

இந்தியாவில், சமந்தர் சிங் என்பவர், 1995ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, அருள்சகோதரி ராணி மேரி அவர்களைக் குத்திக் கொலை செய்தார். கிறிஸ்தவர்கள் இந்தியாவின் நம்பிக்கை என்று, சிங் சொல்லியிருக்கிறார். 11 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர், இச்சகோதரியின் குடும்பமும், இச்சகோதரியின் கிளாரிஸ்ட் சபை மாநிலத் தலைவரும், இன்டோர் ஆயரும் கையெழுத்திட்டு, அரசுக்கு மன்னிப்பு மனு ஒன்றை எழுதியதைத் தொடர்ந்து சிங் விடுதலை செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்தபோது, இவரது மனைவி, இவரை விட்டு விலகி விட்டார். இவரது முதல் மகன் இறந்து விட்டார். அச்சமயத்தில், இவர் இக்கொலையைச் செய்யத் தூண்டிய ஆளை, எப்படி பழிதீர்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், கொலைசெய்யப்பட்ட அருள்சகோதரி ராணிமேரியின் சகோதரியான, அருள்சகோதரி செல்மி பவுல், சிறைக்குச் சென்று, சிங் அவர்களைக் கட்டித் தழுவி, அவரை சகோதரரே என அழைத்தார். அது, சிங்கின் மனதை நெகிழச் செய்தது. அச்சகோதரி இடையிடையே சிறைக்குச் சென்று, அவரைச் சந்தித்தார். சிங் அவர்களும், தனது செயலுக்கு மனம் வருந்தினார். பழிவாங்கும் திட்டத்தைக் கைவிட்டார்.

மன்னிப்பது சாத்தியமா? மற்றவர்கள் செய்த துரோகத்தை மறப்பது முடிகிற காரியமா?. இப்படி கேள்விகள் எழலாம். ஆனால், இது சாத்தியமே என்று, பலர், செய்து காட்டி வருகிறார்கள். ஆண்டவர் இயேசு, பகைவர்களை மன்னிக்கச் சொன்னது மட்டுமன்றி, தனது வாழ்விலும் வாழ்ந்து காட்டியவர். அவர், மலைப்பொழிவில், உங்கள் எதிரி, உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச்செல்லும்போது, வழியிலேயே அவருடன் உடன்பாடு செய்து கொள்ளுங்கள்(மத்.5:25) என்றார். பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்(லூக்.6:31) என்றார். அன்பர்களே, பிறர், தன்னை மன்னிக்க வேண்டுமென்று விரும்புகிறவர், முதலில், பிறரை மன்னிக்க வேண்டும். நமக்கு எதிராகத் தீமை செய்தவர்களையும், மனதைப் புண்படுத்தியவர்களையும் மன்னிக்கும்போது, நமக்கு மனதில் ஒரு மகிழ்ச்சி, நிம்மதி இருக்கும். மாற்றம் ஒன்றுதான், மாறாதது. எதிரிகளை ஒழிக்க முதல்வழி, மன்னிப்பு என்ற பாடல் வரிகள் நமக்குத் தெரியும். ஒருவருக்கு நீ கொடூரமான தண்டனை கொடுக்க நினைத்தால், அவரை நீ மன்னித்து விடு என்பார்கள். மன்னிப்பதும், மன்னிப்பு கேட்பதும் எவ்வளவு மகத்தானது.   

வீரம் என்பது எதிரியைப் பழிவாங்குவதில் இல்லை, ஆனால், அவரை மன்னிப்பதில் இருக்கின்றது. வன்முறையைக் கையில் எடுக்கும் மனிதர்களுக்கு நாம் இதைப் புரிய வைக்க வேண்டும். நாம் செல்லும் இடங்களில் எல்லாம் அன்பை விதைக்க வேண்டும். அன்பை விதைப்பது அப்படியொன்றும் கடினமானது அல்ல. சிறிய சிறிய விடயங்களை நாம் தொடர்ந்து செய்தாலே போதுமானது. தினமும் ஒருவருக்கு ஏதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு புன்னகை, ஆறுதல் வார்த்தைகூட உதவிதான். எத்தனையோ மனிதர்கள் இதற்காகக் காத்திருக்கிறார்கள். முகத்தை எப்போதும், கடுகடுவென வைத்திராமல், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், யாரைப் பார்த்தாலும், இலேசாக ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்துங்கள். இந்தச் சிரிப்பு போலியானதாக இல்லாமல், உள்ளத்திலிருந்து வருவதாக இருக்கட்டும். பகைவரை மதிப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். இதில், உங்களின் மதிப்பு குறைந்து விடாது. ஒவ்வொருவருக்கும் தன்மானம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கு மதிப்பு கொடுங்கள். தன்னை மதிக்கிறவரைத்தான், மற்றவரும் மதிப்பார். நன்றி சொல்லப் பழகுங்கள். நாம் சேரவேண்டிய இடத்திற்கு, பாதுகாப்பாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பேருந்து ஓட்டுனர், ஆட்டோ ஓட்டுனர், இன்னும், உணவகத்தில் உணவு பரிமாறுபவர், கை கழுவத் தண்ணீர் ஊற்றுபவர், அலுவலகத்தில் கதவைத் திறந்து விடும் காவலாளர்.. இப்படி, பழக்கம் இல்லாத மனிதருக்கு மலர்ந்த முகத்துடன் நன்றி சொல்லுங்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, நலம் விசாரியுங்கள். உண்மையான அன்போடும் அக்கறையோடும், விசாரிக்கும்போது காயங்கள் ஆறிவிடுவதற்கு வாய்ப்புண்டு.

J.R.D. Tata (Jehangir Ratanji Dadabhoy) அவர்களின் நண்பர் ஒருவர், ஒருமுறை, அவரிடம், தனது பேனாவை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவதாகவும், பேனாக்களை அடிக்கடி தொலைத்து விடுவதாகவும், அதனால், அவர் மிகவும் விலை குறைந்த பேனாக்களையே பயன்படுத்துவதாகவும் சொன்னார். தனது கவனமின்மை பற்றியும் சொல்லி கவலைப்பட்டார் அவர். அதற்கு Tata அவர்கள், அவரிடம், அவரின் தகுதிக்கேற்ப விலையுயர்ந்த பேனா ஒன்றை வாங்குமாறு ஆலோசனை சொன்னார். அவரும் 22 காரட் தங்கப் பேனா ஒன்றை வாங்கினார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் சென்று அவரைச் சந்தித்த Tata அவர்கள், இப்போதும் பேனா தொலைகிறதா? என்று கேட்டார். இல்லை, விலையுயர்ந்த பேனாமீது தான் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகச் சொன்னார் அவர். அப்போது Tata அவர்கள், அவரிடம், பேனாவின் மதிப்பே, உம்மை மாற்றியது என்று சொன்னார்.

நம் ஒவ்வொருவர் வாழ்வில், நடப்பதும் இதுதான். நாம் எதை அதிகம் மதிக்கின்றோமோ, அதன்மீது மிகுந்த கவனம் செலுத்துவோம். உடல்நலத்தை மதித்தால், எப்போது, என்ன சாப்பிட வேண்டுமென்பதில் கவனமாக இருப்போம். நம் நண்பர்களை மதித்தால், அவர்களை மதிப்போடு நடத்துவோம். உறவுகளை மதித்தால், அவற்றை முறிக்க மாட்டோம். எனவே, அன்புகூர்வதன், மன்னிப்பதன், மன்னிப்புக் கேட்பதன் மதிப்பை உணர்ந்து, கிறிஸ்மஸ்க்கு நம்மைத் தயாரிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.