2016-12-19 16:39:00

நமக்குள் பிறக்கும் இறைவனை எவ்வாறு வரவேற்கிறோம்?


டிச.19,2016.  இறைவன் மனிதரிடம் நெருங்கி வந்த விழாவின் அருளைப் பெறும் நோக்கில், இவ்விழாவை, அமைதியில் செலவிடப் பழகுவோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்களுடன் கொள்ளும் நெருக்கம், அன்பு, தாழ்ச்சி, கனிவு ஆகிய அருள்களை உள்ளடக்கிய கிறிஸ்து பிறப்பின் உண்மை உணர்வைப்பெற ஒவ்வொருவரும் முயல்வோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா மற்றும் புனித யோசேப்பு ஆகியோரின் சோர்வையும் மகிழ்வையும் நமக்கு விளக்கும் இடமாக கிறிஸ்மஸ் குடில் உள்ளது என்றார்.

இறைவனை வரவேற்பதில் பெருவிருப்பத்தை வெளிப்படுத்திய அன்னை மரியாவும், இறைவிருப்பத்தை முழு நம்பிக்கையுடனும் தாழ்ச்சியுடனும் ஏற்று அதனைப் பின்பற்றிய புனித யோசேப்பும் அன்பின் மறையுண்மையில் முழுவதுமாக தங்களை ஈடுபடுத்தியவர்கள் என்ற திருத்தந்தை, நமக்குள்ளும் கொடையாக வழங்கப்படும் இறைமகனை நாம் எவ்வாறு வரவேற்கிறோம் என்பது குறித்துச் சிந்திப்போம் என்றார்.

இயேசுவின் வருகைக்கு ஆம் என்று சொல்லி, அன்னை மரியா ஏற்றுக்கொண்டாதால், உலகின் தலைவிதியே மாறியது என்பது போல், நாமும் இயேசுவை ஏற்று, அவர் வழியில் நடக்கும்போது, நமக்கும் உலகுக்குமான மீட்பின் திட்டத்தில் ஒத்துழைக்க முடியும் எனவும் கூறினார் திருத்தந்தை.

தன்னால் புரிந்துகொள்ள முடியாதவைகளையும், இறைவனின் துணையோடு புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்ட புனித யோசேப்பின் செயல், இறைவனில் நாம் வைக்கவேண்டிய விசுவாசத்தையும், நம் கீழ்ப்படிதலையும் கற்றுத்தருவதாக உள்ளது என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.