2016-12-19 16:27:00

திருத்தந்தை : மற்றவரோடு பகிரும் மகிழ்வு பலுகுகின்றது


டிச.19,2016.  'எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி'  என இயேசுவின் பிறப்பு குறித்து ஆண்டவருடைய தூதர்  இடையர்களை நோக்கிக் கூறியது, கடவுள் நம்மை அன்பு கூர்கிறார், நம்மை ஒருபோதும் கைவிடார் என்பதிலிருந்து பிறந்ததாகும்  என இத்திங்களன்று தன்னை சந்திக்க வந்த இத்தாலிய இளையோரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க நடவடிக்கை அமைப்பின் இளையோர் பிரதிநிதிகள் ஏறத்தாழ 70 பேரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சோகங்கள் நம்மைச்சூழும்போது,  நம் நண்பர்களால் நாம் ஏமாற்றப்படும்போது, எல்லாமே தவறாக நடக்கிறதே என வருந்தும்போது, 'கடவுள் என்னை அன்புகூர்கிறார், என்னைக் கைவிடார்'  என எண்ணி உறுதியுடன் நடைபோடுவோம் என அழைப்பு விடுத்தார்.

இறைவன் நம்மை அன்புகூர்கிறார் என்ற  உண்மையில் பிறக்கும் மகிழ்வு, மற்றவரோடு பகிரப்படும்போது, பலுகிப் பெருகுகின்றது எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன்னைச் சந்தித்த இளையோர் பிரதிநிதிகள் வழியாக, உலகின் இளையோருக்கு ஒரு விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை. வரலாற்று நினைவுகளையும், வாழ்க்கையின் அனுபவங்களையும் கொண்டுள்ள தாத்தா, பாட்டிகளுக்குச் செவிமடுத்து, அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொள்ளவேண்டுமென இளையோரை விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதிக்கான இளையோரின் அர்ப்பணங்கள், அனைவருக்கும் பரவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு இத்தாலிய கத்தோலிக்க இளையோர் அமைப்பு, அமைதியுடன் 'ஒருமைப்பாடு' என்பதையும் இணைத்து, நேபாள இளையோருக்கு உதவத் திட்டமிட்டுச் செயலாற்றியதற்கு, தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.