2016-12-17 14:09:00

திருவருகைக்காலம் - 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


அடுத்த ஞாயிறு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழாக் காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியக் கனவுகள், பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது ‘கிறிஸ்மஸ் தாத்தா’ என்ற கனவையும், குழந்தைகள் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இத்தகையக் கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்று அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி மனுக்குலம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சென்ற ஞாயிறு, பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று, இறைவாக்கினர் எசாயா, கற்பனை கலந்து கண்ட கனவைப் பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் கனவைப் பற்றி சிந்திக்க வந்திருக்கிறோம். குறிப்பாக, கனவுக்கு செயல் வடிவம் கொடுப்பதுபற்றியும், அவ்விதம் செயல்வடிவம் கொடுப்பதற்கு நம்மிடம் உள்ள தடைகள் பற்றியும் சிந்திக்க வந்திருக்கிறோம். நமது சிந்தனைக்குத் துணையாக, கடந்த வாரம் நிகழ்ந்த இரு செய்திகளை நினைவுக்குக் கொணர்வோம்.

முதல் செய்தி, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது - ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்த முர்தாசா அஹ்மாதி (Murtaza Ahmadi) என்ற ஆறு வயது சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், இலயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவர்களைச் சந்தித்தான்.

இரண்டாவது செய்தி, இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்தது - தன் மகளின் திருமண பரிசாக, ஒரு செல்வந்தர், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்தார்.

முதல் செய்தியில் கூறப்பட்டுள்ள சிறுவன் முர்தாசா, ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், மெஸ்ஸி அவர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் பை ஒன்றை, கால்பந்தாட்ட பனியன் போலச் செய்து, அதில் ‘மெஸ்ஸி’ என்ற பெயரையும், 10 என்ற எண்ணையும் எழுதி, அச்சிறுவன் உடுத்தியிருந்த புகைப்படம், மெஸ்ஸியின் இரசிகர் வட்ட வலைத்தளத்தில் பதிவாகி, உலகெங்கும் வெகு வேகமாகப் பரவியது. அதன் விளைவாக, அச்சிறுவன், தன் கனவில் கண்டுவந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களை, டிசம்பர் 13, கடந்த செவ்வாய், கட்டார் நாட்டில் நிகழ்ந்த ஒரு கால்பந்தாட்ட விளையாட்டில் சந்தித்தான்.

இரண்டாவது செய்தி, இந்தியாவில் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த மனோஜ் முனோத் (Manoj Munot) என்ற செல்வந்தர், தன் மகளின் திருமணச் செலவைக் குறைத்துக்கொண்டு, அத்தொகையில், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது மகள், ஷிரேயாவும், அவரது கணவரும் இணைந்து, அந்த ஏழைகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினர். "என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய திருமணப் பரிசு இதுதான். வறியோர் எங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களை, எவ்வளவு பணம் தந்தாலும் எங்களால் வாங்கியிருக்க முடியாது" என்று மணப்பெண் ஷிரேயா கூறினார்.

இந்த இரு செய்திகளும், அவை நமக்குள் உருவாக்கும் பல்வேறு  எண்ணங்களும் சில பாடங்களைப் புகட்டுகின்றன. முதல் செய்தியில் நாம் சந்திக்கும் முர்தாசா, வறுமையும், ஆபத்தும் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த சிறுவன். அச்சிறுவனின் குடும்பம், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களைப் பற்றி, தன் மனதுக்குள் வளர்த்துக்கொண்ட கனவுகளே, அச்சிறுவன் சந்தித்த வேதனைகளிலிருந்து அவனை ஓரளவு காத்தது என்று சொல்லலாம். சிறுவன் முர்தாசா, தன் கனவு நாயகனைக் கண்டான் என்பதை மகிழ்வுடன் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்டு. ஒரு சிலரோ, அச்சிறுவன் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியது தவறு என்ற பாணியில் விமர்சனம் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செல்வந்தர் மனோஜ் அவர்கள், ஏழைகளுக்கு வீடுகட்டித் தந்த நற்செயலை, பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க முடியும். இந்தியாவில், பணத்தட்டுப்பாடு உருவானபின்பு, ஓர் அரசியல்வாதி, கோடி கோடியாகச் செலவு செய்து, தன் மகளின் திருமணத்தை நடத்தினார் என்ற செய்தி வெளியான சில வாரங்களில், மனோஜ் அவர்களைப்பற்றிய இந்தச் செய்தியும் வெளியானது.

பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்செய்தியை வெளியிட்டதும், ஆரம்பத்தில், மனோஜ் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி, வாசகர் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால், சிறிதுநேரம் சென்று, எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. "இதுபோன்ற செல்வந்தர்களின் திருமணம், பெரும்பாலும் விவாகரத்தில்தான் முடிகின்றன” என்று ஒருவரும், “இப்படி, சிறு, சிறு வீடுகளை கட்டி, நிலத்தை வீணாக்குவதைவிட, அடுக்குமாடி அமைப்பில் கட்டியிருந்தால் நல்லது” என்று மற்றொருவரும் “அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கு, இந்துக்களுக்கு மட்டுமே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை" என்று வேறொருவரும், எதிர்மறை கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில் நம் உள்ளங்களில் நல்ல எண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம் அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை எழுகின்றன. வயது வந்தவர்கள் என்ற காரணத்தால், நம்மில் பலர், கனவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் வாழப் பழகிக்கொள்கிறோம்.

கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம்.

மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. (மத். 1: 18-24) கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், ஒருசில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில், யோசேப்பு, தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.

இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்புவின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை நெருங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: “யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்” என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம் சிந்திக்கலாம்.

சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர் உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும் பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற ‘குழந்தை இயேசு மருத்துவமனை’யைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது" என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று தொடர்ந்தார்:

"கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர் அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச் செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம் நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச் சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில் உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.

 

எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.

முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.

இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு ‘க்ரீமை’ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும்  நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு, தென்னாப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகளை வளர்ப்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.