2016-12-17 16:12:00

சேரிகளில், தெருக்களில் வாழ்வோர் திருத்தந்தைக்கு வாழ்த்து


டிச.17,2016. டிசம்பர் 17, இச்சனிக்கிழமையன்று, தனது எண்பதாவது பிறந்த நாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, உலகெங்கிலுமிருந்து நல்வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

இச்சனிக்கிழமை காலை நிலவரப்படி, பலமொழிகளில், மின்னஞ்சல் வழி வந்த வாழ்த்துக்கள் மட்டும் ஐம்பதாயிரத்தைத் தாண்டியுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும், சாந்தா மார்த்தா இல்லத்திற்கு, இச்சனிக்கிழமை காலை 7.15 மணிக்கு, வீடின்றி வாழ்கின்ற எட்டுப் பேர் சென்று, திருத்தந்தைக்கு, பெரிய, சூரியகாந்தி மலர்க்கொத்தை அளித்து, பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைக் கூறினர். திருத்தந்தையும் நன்றியோடு ஒவ்வொருவரையும் வாழ்த்தி, அவர்களைத் தன்னோடு உணவு அறைக்கு அழைத்துச் சென்று, அவர்களோடு காலை உணவு அருந்தினார். அவர்களுக்கு, அர்ஜென்டீனா நாட்டு இனிப்புக்களையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு, உரோமையில் இலவச உணவு வழங்கும், பல்வேறு இல்லங்களில், மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பின்னர், அங்கு வரும் ஏழைகளுக்கு இனிப்பு, ஒரு சிறிய பரிசு மற்றும், ஒரு படம் வழங்கப்பட்டன.

சாந்தா மார்த்தா இல்லத்தில்,திருத்தந்தைக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றிருந்த எட்டுப் பேரில் இருவர் பெண்கள் மற்றும் ஆறு பேர் ஆண்கள். இவர்களில் நால்வர் இத்தாலியர், ஒருவர் மோல்தோவா நாட்டவர், இருவர் ருமேனியர்கள் மற்றும் ஒருவர் பெரு நாட்டவர். மேலும், திருத்தந்தை அவர்கள், புவனோஸ் அய்ரெஸ் பேராயராகப் பணியாற்றியபோது, அவர் விரும்பிச்செல்லும், அந்நகர் சேரி மக்களிடமிருந்து, திருத்தந்தைக்கு சிறப்பான நல்வாழ்த்துக்களும் வந்தன என்று திருப்பீடம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.