2016-12-17 16:19:00

80வது பிறந்த நாள் இசை நிகழ்ச்சி நிதி Bangui மருத்துவமனைக்கு


டிச.17,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்பதாவது பிறந்த நாளையொட்டி, இச்சனிக்கிழமை மாலையில், வத்திக்கானின் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெறுகின்ற இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, மத்திய ஆப்ரிக்க குடியரசின் Bangui நகர் சிறார் மருத்துவமனைக்கும், மத்திய இத்தாலியில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் காவல்துறை உருவாக்கப்பட்டதன் 200ம் ஆண்டை முன்னிட்டு, அந்தத் துறை ஏற்பாடு செய்த, இசை நிகழ்ச்சியை, இரக்கத்தின் செயலோடு சேர்த்து சிறப்பிக்கத் தீர்மானித்து, அதில் கிடைக்கும் நிதியை, பிறரன்புப் பணிகளுக்கென வழங்குவதாக, வத்திக்கான் காவல்துறை தலைவர் தொமெனிக்கோ ஜான்னி அவர்கள் அறிவித்தார்.

2015ம் ஆண்டு நவம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Bangui நகர் சிறார் மருத்துவமனையைப் பார்வையிட்டபோது, தானும், திருத்தந்தையுடன் சென்றதாகவும், அந்த மருத்துவமனையில், தான் பார்த்த சிறாரின் நிலை, அவர்களுக்கு நிதியுதவி செய்யத் தூண்டியதாகவும், செய்தியாளர்களிடம் கூறினார் ஜான்னி.

இத்தாலிய புகழ்பெற்ற பாப் இசை பாடகர் Claudio Baglioni அவர்கள், இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவார் எனவும், ஜான்னி அவர்கள் தெரிவித்தார்.

வத்திக்கான் காவல்துறை, 1816ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் அவர்களால்,  உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.