2016-12-16 16:44:00

வன்முறைக்கு முன்பாக திருஅவையால் மௌனம் காக்க இயலாது


டிச.16,2016. பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்களின், போதைப்பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கையில், ஒரு நாளைக்கு ஏறக்குறைய முப்பது பேர் வீதம் கொல்லப்பட்டுவரும் வேளை, இந்நடவடிக்கையில், திருஅவை மௌனம் காக்க இயலாது என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான அரசின் நடவடிக்கையில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து மாதங்களில், ஆறாயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், இவ்வாறு கூறியுள்ளார், மனிலா துணை ஆயர் Broderick Pabillo.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இடம்பெறும், கொலைகளுக்கு எதிராய், பிலிப்பீன்ஸ் மக்கள் குரல் எழுப்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஆயர் Pabillo அவர்கள், மக்களை மற்றொரு முறையில் கொடுமைப்படுத்துவதாக, இந்நடவடிக்கை உள்ளது என்று, குறை கூறியுள்ளார். இக்கொலைகளில், தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுடன், குறிப்பாக, ஏழைகளுடன், திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது எனவும் ஆயர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிலிப்பீன்சின், Davao நகரின் மேயராகப் பணியாற்றியபோது, குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை, தானே கொலை செய்ததாக, அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே அவர்கள், மனிலாவில், தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில், இப்புதனன்று ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CBCP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.