2016-12-16 16:11:00

திருமுழுக்கு யோவான் போன்று இயேசுவுக்கு சாட்சி பகர..


டிச.16,2016. இறைமகனின் வருகையைச் சுட்டிக்காட்டுவதற்காக மரணத்தையும் ஏற்குமளவுக்கு, தன்னேயே கையளித்து,  தாழ்மையுடன் சான்று பகர்ந்த, “பெரியவரான”  திருமுழுக்கு யோவான் அவர்களை, கிறிஸ்தவர்கள், தங்களுக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை, திருப்பலியில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், துறவு மற்றும் திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகள் நிறைவு கண்ட ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் தம்பதியர் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு, இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தனது மறையுரையில் இவ்வாறு கூறினார்.

திருமுழுக்கு யோவான் அவர்களின் அழைப்பை மையப்படுத்தி மறையுரையாற்றிய, திருத்தந்தை, திருமுழுக்கு யோவான் மிகவும் தாழ்மையுடையவர், இயேசு பிற்காலத்தில் எடுக்கவிருந்த பாதையையே, திருமுழுக்கு யோவான் அவர்களும் எடுத்தார் என்றும் கூறினார்.

நம் தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்வு, இயேசுவுக்கு, எப்போதும் பாதையைத் திறந்து விட்டுள்ளதாக இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புவதற்கு, இந்நாள் அழகான நாள் என்று, தங்களின் அழைத்தல் வாழ்வில், பொன் விழா காண்போரிடம் கூறிய திருத்தந்தை, நம் வாழ்வு, எப்போதும், இயேசுவை சுட்டிக்காட்டுவதாய் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

இத்திருப்பலியில் கலந்துகொண்ட எல்லாரும், புதிய பாதையில் தொடர்ந்து நடக்க, திருமுழுக்கு யோவான் உதவுகிறார் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.