2016-12-16 16:34:00

இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 சாலை விபத்து இறப்புகள்


டிச.16,2016. இந்தியாவில், சாலை விபத்துக்கள் பெருமெண்ணிக்கையில் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுபானக் கடைகளை மூடவேண்டும், என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால், விபத்துக்கள் ஏற்படுவதாகக் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில், ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் (T.S.Thakur) அவர்கள், தலைமையில், மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இவ்வழக்கை விசாரித்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு, 2017ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வரும் எனவும், நெடுஞ்சாலைகளில், தற்போது இயங்கும் மதுபானக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி, 2017ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், 1,50,000 பேர், சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் என்றும், அதற்கு மூன்று மடங்காக, அவற்றில் காயமடைபவர்களின் எண்ணிக்கை உள்ளது என்றும், இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் அண்மை அறிக்கை கூறியுள்ளது. 2015ம் ஆண்டில், குறைந்தது, ஐந்து இலட்சம் சாலை விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, ஒரு நாளைக்கு, 1,374 விபத்துக்கள் மற்றும், 400 இறப்புகள் வீதம் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.