2016-12-15 16:16:00

துன்பத்திற்கு சிறந்த மருந்து, அன்பும், நம்பிக்கையும்


டிச.15,2016. துன்பம் ஏன் என்ற கேள்விக்கு, பெரும் இறையியல் விளக்கங்கள் தருவதற்குப் பதில், துன்பத்தை அன்பால் வெல்ல முடியும் என்பதையே இயேசு தன் வாழ்வில் சொல்லித் தந்தார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு மருத்துவமனை குழுமத்திடம் கூறினார்.

உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் குழந்தை இயேசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நால்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் தன் உரையை வழங்கினார்.

குழந்தைகள் ஏன் துன்புறுகின்றனர் என்றும், துன்பத்திற்கு எது மருந்தாகும் என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்த திருத்தந்தை, குழந்தைகள் ஏன் துன்புறுகின்றனர் என்பதற்கு தன்னிடம் எளிதான பதில்கள் கிடையாது என்றும், துன்பத்திற்கு தரக்கூடிய சிறந்த மருந்து, அன்பும், நம்பிக்கையும் என்றும் பதிலளித்தார்.

சின்ன விடயங்களில் வெளிப்படும் அழகு குறித்து ஒருவர் பேசியதைப் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் விழாவின் மையமே, கடவுள் ஒரு சிறு குழந்தையாக வந்தார் என்ற உண்மை என்பதை தெளிவுபடுத்தினார்.

குழந்தை இயேசுவுக்கு உரிய குணங்கள் என்ன என்று ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தத் திருத்தந்தை, கனவு காண்பதும், தன்னையே வழங்குவதும் குழந்தை இயேசுவின் தனிப்பட்ட குணங்கள் என்று கூறினார்.

புனித யோசேப்பு கனவு கண்டார் என்று, வருகிற ஞாயிறன்று வாசிக்கவிருக்கும் நற்செய்தியைப் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, நம் ஒவ்வொருவர் குறித்தும் இறைவன் கனவுகள் கொண்டிருக்கிறார் என்றும், கனவுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்வு மிகுந்த களைப்பைத்தரும் என்றும் எடுத்துரைத்தார்.

கனவு காண்பதைத் தொடர்ந்து வருவது, பரிசு என்று கூறியத் திருத்தந்தை, நமது கனவுகள் நம்மைச் சுற்றியே வலம்வருவதைவிட, அடுத்தவரை மையப்படுத்திய கனவாக அமைந்தால், அவர்களுக்கு என்ன செய்யலாம், அவர்களுக்கு நம்மையே எவ்விதம் வழங்கலாம் என்ற பாணியில் நம்மால் சிந்திக்க முடியும் என்று விளக்கிக் கூறினார்.

இறுதியில், தன்னைச் சந்திக்க வந்திருந்த அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்து, தன் உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.