2016-12-15 16:29:00

கத்தோலிக்கத் திருஅவையின் மிக முக்கிய விழுமியம், அமைதி


டிச.15,2016. திருத்தூதர் பேதுருவின் வழியே, இறைவன் வழங்கிய அழைப்பும், பணியும் மதம் சார்ந்தவை என்றாலும், கத்தோலிக்கத் திருஅவை, நாடுகளுடன் தொடர்புகளை உருவாக்கி வந்துள்ளது என்பதை, வரலாற்றில் காண முடிகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பல நாட்டு தூதர்களிடம் கூறினார்.

Burundi, Fiji, Mauritius, Moldova, Sweden, மற்றும், Tunisia ஆகிய நாடுகளின் தூதர்களை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்கள் வழியே, அந்நாட்டு அரசுத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறினார்.

மனித உயிர், மற்றும், மனித இயல்பு ஆகியவற்றில் ஊன்றிய ஆன்மீக விழுமியங்களை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்வதே கத்தோலிக்கத் திருஅவையின் தலையாயக் கடமை என்று கூறியத் திருத்தந்தை, இந்த விழுமியங்களில் மிக முக்கியமானது, அமைதி என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கடந்த 50 ஆண்டுகளாக புத்தாண்டு நாள், உலக அமைதி நாள் என்று திருத்தந்தையரால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது என்று தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்திங்களன்று தான் வெளியிட்ட உலக அமைதி நாள் செய்தி, "அகிம்சை: அமைதிக்கு வழிவகுக்கும் அரசியல் முறை" என்ற தலைப்பில் அமைந்திருந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆணவம் மிகுந்த அதிகாரத்தாலும், ஆயுதங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அடக்குமுறையாலும் உருவாகும் அமைதி பொய்யானது என்று கூறியத் திருத்தந்தை, மனிதர்கள் மீது காட்டப்படும் உண்மையான மதிப்பு, சுதந்திரம், நீதி இவற்றின் அடிப்படையில் உருவாகும் அமைதியே நிலையானது என்று எடுத்துரைத்தார்.

வன்முறையை வளர்ந்துவரும் இன்றையச் சூழலில், நாட்டிற்குள்ளும், பன்னாட்டு அளவிலும் பொறுப்பில் இருப்போர், வன்முறையற்ற ஒரு வாழ்வு முறையை வளர்ப்பது மிகவும் அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு தூதர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.