2016-12-14 13:58:00

மறைக்கல்வியுரை : கடவுள் அருகிலிருக்கிறார், ஆர்ப்பரிப்போம்


டிச.,14,2016. ஐரோப்பாவின் குளிர் காலத்தையொட்டி வழக்கம்போல் இவ்வாரமும் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் மண்டபத்திலேயே இடம்பெற்றது.

'நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!' என்ற இறைவாக்கினர் எசயா நூலின் 52ம் பிரிவின் வார்த்தைகளின் தொடர்ச்சி முதலில் வாசிக்கப்பட, அவ்வார்த்தைகளை மையமாக வைத்து இயேசுவின் வருகை பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்று இங்கு வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் எசயாவின் வார்த்தைகள், வரவிருக்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு தயாரிக்க நமக்கு உதவுகின்றன. கடவுள் அருகிலிருக்கிறார் என்பதால் இறைமக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்குமாறு இறைவாக்கினர் எசயா அழைப்பு விடுக்கிறார். நாடு கடத்தப்பட்டோருக்கு விடுதலையும், இறைவார்த்தையில் தொடர்ந்து நம்பிக்கைக் கொண்டு எஞ்சியிருக்கும் விசுவாசிகளுக்கு மீட்பும், புதுப்பித்தல் குறித்த வாக்குறுதியும் அளிக்கும் இறைவன், அருகில் உள்ளார். அமைதி, மீட்பு என்ற மகிழ்ச்சியான செய்திகளைத் தாங்கியவராக, 'கடவுள் அரசாள்கிறார்' என அறிக்கையிடும் 'தூதுவரின் பாதங்கள் மலைகளின் மேல் எத்துணை அழகாக இருக்கின்றன' என இறைவாக்கினர் எசயா உரைக்கின்றார். இந்த இறைவாக்கு, இயேசு கொணர்ந்த அரசில் நிறைவேறியது. இந்த அரசின் பிறப்பையே, மலர்ச்சியையே நாம் கிறிஸ்மஸில் கொண்டாடுகிறோம். இறைவனின் இந்த வாக்குறுதியால் பலம் பெற்றவர்களாக, நாம், இறையாட்சி துவங்கியுள்ளது என்பதையும்,  அமைதி, நீதி, உண்மை ஆகியவைகளுக்காக ஏங்கும்  உலகிற்கு, அந்த இறையரசின் மகிழ்ச்சிநிறை  முன்னறிவிப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உறுதியான ஞானத்துடன், ஏற்றுக்கொள்ளும்போது, எந்தவிதமான  இடர் நிலைகளையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். நம் ஒவ்வொருவர் அருகிலும் வரும் நோக்கில், ஏழ்மையையும் பலவீனத்தையும், சிறுமையையும் ஏற்றுக்கொள்வதன் வழியாக, தன் பெரும் வல்லமையை வெளிப்படுத்தும் இறைமகனாம் குழந்தை இயேசு கொணர்ந்த, மீட்பின் நற்செய்திக்கு இந்த கிறிஸ்மஸ் பெருவிழாவில் நம் இதயங்களைத் திறப்போமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் சனிக்கிழமையன்று, அதாவது, டிசம்பர் 17ம் தேதி நிகழ உள்ள தன் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார். பின்னர், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.