2016-12-13 15:56:00

திருத்தந்தை : வாழ்வுக்கு “ஆகட்டும்” சொன்னவர் அன்னை மரியா


டிச.13,2016. நம் வாழ்வில், நாம் எதிர்கொள்ளும் பல்வேறு நிலைகளில், நம் விசுவாசத்தையும், நம் நம்பிக்கையையும் ஊக்கப்படுத்துபவராக, அன்னை மரியா, நம்முடன் துணை வருகின்றார் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்திங்கள் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், குவாதலூப்பே அன்னை மரியா விழாத் திருப்பலியை நிறைவேற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு தனது மறையுரையில் கூறினார்.

ஏராளமான மக்களை, குறிப்பாக, மாண்புள்ள வாழ்வு வாழ்வதற்கு, சிறிதளவு தேவையானவைகளைப் பெறுவதற்குக் கஷ்டப்படும் மக்களை ஒதுக்கும் இன்றைய வளமான சமுதாயத்தில், அன்னை மரியாவின் பிரசன்னம், ஒப்புரவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது எனக் கூறினார் திருத்தந்தை.

வாழ்வுக்கு ஆகட்டும் என்று சொன்ன அன்னை மரியா, மனிதர் எல்லா விதங்களிலும், புறக்கணிக்கப்படுதலுக்கும், ஒதுக்கப்படுதலுக்கும் மறுப்பும் சொன்னவர் எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்பிக்கையின்மை, அக்கறையின்மை மற்றும், அறியாமை நிறைந்த சமுதாயத்திற்கெதிராய்ப் போராடிய, இன்னும், நற்செய்தியின் மகிழ்வை உறுதிப்படுத்தவும், நற்செய்திக்கு உயிரூட்டம் அளிக்கவும் போராடிய பெண், அன்னை மரியா எனவும் கூறினார் திருத்தந்தை.

நம் ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்கி, அவரின் வாழ்வை, தங்களின் வாழ்வாக்க முயற்சி செய்பவர்களில், அவரின் பிரசன்னம் எப்போதும் இருக்கின்றது என்பதும், அவர்கள், ஆண்டவரின் இரக்கத்தின் உயிருள்ள அடையாளங்களாக மாறுகின்றனர் என்பதும், குவாதலூப்பே அன்னை மரியாவை நோக்கும்போது, நமக்கு நினைவுப்படுத்தப்படுகின்றது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்கக் கண்டத்தின் பாதுகாவலராகிய குவாதலூப்பே அன்னை மரியா விழாவான, டிசம்பர் 12.  இத்திங்கள் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் விசுவாசிகளுடன் சேர்ந்து, விழாத் திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளின் கொடிகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.