2016-12-13 16:12:00

குடிபெயர்தல்,முன்னேற்றம் கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி


டிச.13,2016. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற, குடிபெயர்தல் மற்றும் முன்னேற்றம் குறித்த உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு, செய்தி ஒன்றை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

பெருமளவில் மக்கள் குடிபெயர்வதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் களைவதற்கு, அரசுகளும், அரசியல் அதிகாரிகளும் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மக்கள் குடிபெயர்தலும், முன்னேற்றமும், வறுமை, போர் மற்றும், மனித வர்த்தகத்தோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதால், நீடித்த, நிலைத்திருக்கக்கூடிய மனித வளர்ச்சித் திட்டங்கள் மற்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில், இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

டாக்காவில், டிசம்பர் 12ம் தேதி நிறைவடைந்த, குடிபெயர்தல் மற்றும் முன்னேற்றம் குறித்த, 9வது உலகளாவிய கருத்தரங்கை, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் நடத்தின. இந்தக் கருத்தரங்கு, டிசம்பர் 10 முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.