2016-12-12 15:06:00

வாரம் ஓர் அலசல்:வலிமை சேர்க்கும் நெருக்கடிகள்,போராட்டங்கள்


டிச.12,2016. கடந்த ஏழு நாள்களை அலசுவதற்காக, இணைய தினத்தாள்களைத் திறந்தோம். 22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையை மிரட்டும் புயல், அதி தீவிர வர்தா புயல், சென்னை அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது.. மறைந்த தமிழக முதல்வர் அவர்கள் மரணத்தில் நிலவும் மர்மம்... கெய்ரோவின் காப்டிக் ஆலயத்திற்கு அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, மூன்று நாள் தேசிய துக்கம்... நைஜீரியாவில், தற்கொலைப்படை பெண்கள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 57 பேர் பலி.. இப்படி பதிவாகியிருந்த பல செய்திகளில், போயஸ் தோட்டத்தில், முக்கிய அமைச்சர்கள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக, ஒரு தகவல் இருந்தது. எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பார்க்காத கோடிக்கணக்கான தமிழர்கள் அம்மாவுக்காகக் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள்.. இந்த மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன், அதற்காக சில முக்கிய அறிவிப்புக்களை விரைவில் அறிவிக்கப் போகிறேன். இதை ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எல்லாருமே, கண்டிப்பாக, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று, ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் சொல்லி.. மேலும் தொடர்ந்து பேசியிருக்கிறார்...

முதல்வர் நான் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவருமே எளிமையான வாழ்க்கைக்கு இனிமேல் மாற வேண்டும். அரசு விழாக்களில், துளியும் ஆடம்பரம் இருக்கக் கூடாது. ஏழை விவசாயிகள் கஷ்டப்படும்போது நமக்கு எதற்கு ஆடம்பரம்! மூன்று மாதத்திற்குள் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி விடுவோம். கல்வி, நலவாழ்வு, குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தப் போகிறோம். தரமான சாலைகள், தமிழகம் முழுவதும், ஆறே மாதத்திற்குள் போடப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அடியாள்கள், கூலிப்படைகள் அனைவருக்கும், யோகா பயிற்சி கொடுத்து, நேர்மையான ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆற்று மணல், தாது மணல் அள்ளுகிறவர்கள், கிரணைட் வெட்டுகிறவர்கள், அரசு அதிகாரிகள், தரகர்கள் போன்ற எல்லாரிடமும், நேர்மையான தொழில் செய்ய, கற்றுக் கொடுக்க வேண்டும். அரசியல்வாதிகளாகிய நாம், நேர்மையாகவும், எளிமையாகவும் மக்களுக்காக வாழத் தொடங்கிவிட்டால், மற்ற அதிகாரிகள், தவறு செய்ய அஞ்சுவார்கள். சாமான்ய மக்களுக்கும், நேர்மையாக வாழ்வதில், எந்தச் சிரமமும் இருக்காது. வாருங்கள் நாம் எல்லாரும் ஒன்றுபட்டு அம்மாவின் கனவை நிறைவேற்றுவோம்...

இந்தப் பதிவை வாசித்தபோது, தமிழகத்தின் புதிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், நன்றாகப் பேசியிருக்கிறார் என்று, நேயர்களே, உங்களைப்போல, நானும் ஆவலோடு வாசித்துக்கொண்டு வந்தேன். கடைசியில், அது ஒரு சாமான்யரின் கனவு என்று, அறிந்த பின்னர், கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. ஆனாலும், இந்தச் சாமான்யரின் கனவே நம் எல்லாரின் கனவு என்பதால், இந்த கனவு நனவாகும், நல்லாட்சி நடக்கும் என்ற நேர்மறைச் சிந்தனையுடன் அடுத்த செய்தியைப் புரட்டினோம். இச்செய்தி, எதிர்ப்புகள் மத்தியிலும், சில நாடுகளின் தலைவர்கள், குடிமக்களின் நலன்கருதி, திட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்ற நம்பிக்கையை, கொடுத்தது.

துர்க்மெனிஸ்தான்(Turkmenistan) நாட்டில், புகையிலைப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டில், ஓரிடத்தில் அனலாய் எரிந்துகொண்டிருக்கும், இரண்டு பெரிய குடுவைகளில், குடிமக்கள் சிகரெட் பாக்கெட்டுக்களை எறிந்து வரும் காணொளியை, இஞ்ஞாயிறன்று, ஓர் ஊடகம் வெளியிட்டிருந்தது. மத்திய ஆசியாவில், ஆப்கானிஸ்தானுக்கு தென்கிழக்குப் பகுதியில், அமைந்துள்ள, இந்தச் சிறிய நாடு, உலகில், இயற்கை எரிவாயுவை அதிகமாகக் கொண்டிருக்கும் நான்காவது நாடாகும். இந்நாட்டின் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில், அரசுத்தலைவர் அறிவித்துள்ள இத்திட்டத்தின்கீழ், ஐந்நூறு நாள்களுக்குள், புகையிலைப் பயன்பாட்டை முழுவதுமாக ஒழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நடவடிக்கையில் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும், அரசு, இத்திட்டத்தில் உறுதியாய் நின்று, செயல்பட்டு வருகின்றதென, செய்திகள் கூறுகின்றன.

அன்பு நேயர்களே, “வெற்றிகளிலிருந்து உங்களுக்கு வலிமை கிட்டாது. நெருக்கடிகளும் போராட்டங்களுமே உங்களுக்கு வலிமை சேர்க்கும். இன்னல்களின்போதும், எடுத்த முயற்சியிலிருந்து பின்வாங்காமல் இருந்தீர்களேயானால், அதுவே உங்கள் பலம்” என்று, நடிகர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி எனப் பன்முகங்கள் கொண்ட, அமெரிக்க ஐக்கிய நாட்டு, அர்னால்டு அலாய் ஸ்வார்ஷ்நெகர்(Arnold Alois Schwarzenegger) அவர்கள், இளையோர்க்கு ஆலோசனை சொல்லியுள்ளார். அமெரிக்கத் தொழிலதிபர் Colonel Harland David Sanders அவர்கள், KFC என்ற Kentucky Fried Chicken விரைவு உணவகத்தின் நிறுவுனர். ஆனால், இவர் வாழ்வு பற்றி வாசித்தபோது, சிறுவயது முதல், ஏராளமான ஏமாற்றங்களையும், துன்பங்களையும் அனுபவித்தவர் என்று அறிய முடிந்தது. இவர், தனது ஐந்தாவது வயதில், பாசமுள்ள தந்தையை இழந்தார். படிப்பு வராததால், விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். அவர் அம்மா, வேறு ஒருவரைத் திருமணம் செய்தார். அந்த மனிதருக்கு, சாண்டர்சையும், அவரின் தம்பி, தங்கையையும் பிடிக்கவில்லை. அதனால் 13 வயதில் வீட்டை விட்டு ஓடி, குதிரை லாயத்துக்கு வர்ணம் பூசும் வேலையில் சேர்ந்தார். அதன்பின்னர், போலி பிறப்புச் சான்றிதழ் கொடுத்து, இராணுவத்தில் சேர்ந்தார். ஒரே ஆண்டில், அதையும் விட்டுவிட்டு, அலபாமாவில் ரயில்வே பணியில் இருந்த தன் மாமாவிடம் போனார். அவர் சாண்டர்சுக்கு, கொல்லர் பட்டறையில ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கும் இரண்டு மாதம்தான்.

பின்னர், அங்கிருந்து Jasper சென்று, இரயில் பெட்டிகளைச் சுத்தம்செய்யும் மற்றும், இன்ஜினுக்குக் கரி அள்ளிப்போடும் வேலையில் சேர்ந்தார் சாண்டர்ஸ். அப்போது அவருக்கு வயது 16. தண்டவாளங்களைச் சரிபார்க்கிற, செப்பனிடுகிற வேலையும் செய்தார் இவர். 19வது வயதில், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையில, அஞ்சல்வழி சட்டம் படிக்கத் தொடங்கினார். ஒருநாள், சக தொழிலாளியோடு அடிதடியில் இறங்கியதால், இரயில்வே நிர்வாகம், இவரை  வேலையைவிட்டு நீக்கியது. இவர் மனைவியும், தன் குழந்தைகளுடன் இவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். சாண்டர்ஸ் மனம் தளராமல், சட்டப் படிப்பை முடித்து, மூன்று வருடம் வழக்கறிஞர் வேலையும் செய்தார். பின்னர், ஒருநாள், வாடிக்கைக்காரரோடு ஏற்பட்ட தகராறில், வழக்கறிஞர் வேலையும் போய்விட்டது. அதன்பின்னர், ஆயுள் காப்பக நிறுவனத்தில் சில நாள்கள், எண்ணெய் நிறுவனத்தில் சில நாள்கள், படகுப் பணியில் சில நாள்கள் என வேலை செய்தார் சாண்டர்ஸ்.

அதன்பின்னர், ஒரு சிறிய உணவகத்தில், பாத்திரம் கழுவும் வேலைக்குச் சேர்ந்த சாண்டர்ஸ், அப்படியே நன்றாகச் சமைக்கவும் கற்றுக்கொண்டார். பின்னர், அரசின் வெடிமருந்து தயாரிப்புப் பணியில் இருந்தவர்களுக்காக உணவு விடுதி நடத்தினார். தொடர்ந்து, ஓர் உணவு விடுதியின் துணை நிர்வாகி ஆனார். அங்கே இருந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அப்போது சாண்டர்சுக்கு வயது 54. 65வது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். கையில் சேமிப்பு என்று எதுவும் இல்லை. அநாதையானதுபோல் உணர்ந்தார் இவர். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என சிந்தித்தார். தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் வந்தார். கடைசியாக, தன் வாழ்வு பற்றி ஒரு கடிதம் எழுத அமர்ந்தார். தான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என எழுதத் தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு ஒன்று புரியவந்தது. மற்றவர்களைவிட தன்னால் ஒரு காரியத்தை மிகச் சிறப்பாக ஆற்ற முடியும்; ஆனால், அதை இதுவரைக்கும் தான் ஆற்றியதே இல்லை! அதுதான் சமையல், அதுவும், சுவையாக, சிறப்பாக, கோழிக்கறி சமைப்பதில் இவர் திறமைசாலி என்று உணர்ந்தார். அவ்வளவுதான்… தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார். தெரிந்தவர்களிடம் கொஞ்சம் பணம் கடன் வாங்கினார். அந்தப் பணத்திற்கு கோழிக்கறி வாங்கி சமைத்து, அருகிலிருந்த வீடுகளில் கொண்டுபோய்க் கொடுத்தார். அந்தச் சுவைக்கு அவர்கள் அடிமையானார்கள். பின்னர், ஒரு சிறிய உணவகத்தைத் தொடங்கினார். வாடிக்கையாளர்கள் பெருகி, வியாபாரம் மளமளன்னு உயர்ந்து, கெண்டகி என்ற, அந்த நகரத்தின் பெயரிலேயே ‘கெண்டகி ஃப்ரைடு சிக்கன்’என்ற, ஓர் உணவகத்தைத் தொடங்கினார். இன்று இந்த உணவகம், உலகெங்கும் பிரபலம்.

நெருக்கடிகளும் போராட்டங்களுமே, ஒருவருக்கு வலிமை சேர்க்கும். வானமே எல்லை என்பார்கள். இல்லை; ஒவ்வொருவருக்கும் அவரின் மனமே எல்லை. ஒன்றை நூறு விழுக்காடு நம்பினால் மட்டுமே, அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். தொடர்ந்து தோல்விகளைத் தழுவிய சான்டர்ஸ் அவர்கள் வாழ்க்கை உணர்த்தும் பாடம் இதுதான்.

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்ததை நாம் வாசித்திருக்கிறோம். அவர் ஒருமுறை காசியில் இருந்தபோது, அவ்வூரின் ஒரு பகுதியின் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு பக்கத்தில் பெரியதொரு குளமும், மறுபுறத்தில் உயரமான சுவரும் காணப்பட்டன. இடைவழியில் தரையில் ஏராளமான குரங்குகள் இருந்தன.  காசியிலுள்ள பருத்த உடலுள்ள மந்திகள் அவை. சில சமயம் அவை வெறியுடனிருக்கும். அவ்வழியாக, இவர் போனபோது, அவை நெருங்கிவர ஆரம்பித்ததும், இவர் ஓடத் துவங்கினார்.  இவர், தனது வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அவையும் வேகமாக ஓடி நெருங்கி வந்து கடிக்க ஆரம்பித்தன.  தப்புவது அசாத்தியம் என்றே தோன்றிற்று. அந்தக் கணத்தில், அங்கு வந்த ஒரு மனிதர் “அந்த மிருகங்களை எதிர்த்து நில்”என்று அவரிடம் உரக்கக் கூவினார். விவேகானந்தர் அவர்கள், திரும்பிப் பார்த்து அந்தக் குரங்குகளை எதிர்த்து நின்றார். அவை பின்வாங்கி ஓடியே விட்டன. ஆம். துன்பங்களைக் கண்டு நாம் எதிர்த்து நிற்கும்போது, குரங்குகளைப் போல அவை பின்வாங்கி ஓடுகின்றன. வாழ்வில், தோல்விகள், எதிர்ப்புகள், ஏமாற்றங்கள்  கண்டு துவண்டு விடக்கூடாது. நெருக்கடிகளும் போராட்டங்களுமே வாழ்வில் வலிமை சேர்க்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.