2016-12-12 16:22:00

ஏழைகளில் இறைவனைக் காண அழைப்புப் பெற்றுள்ளோம்


டிச.,12,2016. திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து, மூவேளை செப உரையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சியாக இல்லாத கிறிஸ்தவர் என்பவர், எதையோ இழந்தவராகிறார், அல்லது, அவர் கிறிஸ்தவராகவே இல்லாதவர் என உரைத்தார்.

இறைவனின் வருகைக் குறித்து மகிழ இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் அழைப்பு விடுக்கிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மகிழ்ச்சியானது வெறும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல, மாறாக, இதுவே உண்மையானது மற்றும் அதையே நாம் மீண்டும் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார்.

இயேசுவால் கொணரப்பட்ட மீட்பு நம்மை முழுவதுமாக ஆக்ரமித்து, நம்மை புதுப்படைப்பாக்குகிறது எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை, நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்க வரலாற்றில் நுழைந்த இயேசு கிறிஸ்து, நம் வாழ்வைப் பகிர்ந்து, நம் வலிகளை குணமாக்கி, நம் காயங்களுக்கு மருந்திட்டு, நமக்கு புது வாழ்வை வழங்குவதன் வழியாக, நம் மீட்பின் மகிழ்வை நமக்குக் கொணர்கிறார் என்றார்.

இயேசுவின் வருகைக்காக காத்திருக்கும் நாம், நம்மைக் கடந்துசெல்வோரில், குறிப்பாக எளியோர் மற்றும் உதவித் தேவைப்படுவோரில், அவரைக் கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மீட்பரின் நிச்சயமான வருகைக் குறித்து மகிழ்வதற்கு அழைப்புப் பெற்றுள்ள நாம், அந்த மகிழ்வை பிறருடன் பகிர்ந்து, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும், தனிமையில் இருப்போருக்கும், மகிழ்வின்றி வாழ்வோருக்கும், ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம் என, தன் மூவேளை செப உரையில் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.