2016-12-09 16:36:00

வத்திக்கானில், முதல் முறையாக, பெண்கள் சங்கம்


டிச.09,2016. திருப்பீடமும், மவுரித்தானியா இஸ்மாலாமியக் குடியரசும் தங்களுக்குள் முழு அசரசியல் உறவை நிலைப்படுத்த‌, இருதரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

இவ்வெள்ளியன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, திருப்பீடத்தின் சார்பில் மவுரித்தானியாவிற்கான அப்போஸ்தலிக்கத் தூதரகமும், திருப்பீடத்திற்கான மவுரித்தானியா தூதரகமும் உருவாக்கப்பட உள்ளன.

மேலும், வத்திக்கானில், முதல் முறையாக, பெண்கள் மட்டும் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு சங்கம், அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

வத்திக்கானில் பணியாற்றும் 12 பெண்கள் இணைந்து அமைத்துள்ள இச்சங்கத்தின் சட்டதிட்டங்களை வத்திக்கான் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று, இச்சங்கத்தின் தலைவரும், வத்திக்கான் வானொலியின் பணியாளருமான Tracey McClure அவர்கள் கூறினார்.

Donne in Vaticano அல்லது, சுருக்கமாக, D.VA என்றழைக்கப்படும் இச்சங்கத்தின் உருவாக்கத்திற்கு, பெண்களைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஊக்கம் தரும் கருத்துக்களே காரணம் என்று, Tracey McClure அவர்கள் குறிப்பிட்டார்.

1915ம் ஆண்டு, 15ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தையாக இருந்தவேளையில், முதன்முதலாக, ஒரு பெண் வத்திக்கானில், தையல் பணிக்கு அமர்த்தப்பட்டார் என்றும், தற்போது, வத்திக்கானில் பணியாற்றும் 750க்கும் மேற்பட்ட பெண்கள், வத்திக்கானில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 19 விழுக்காட்டினர் என்றும், சங்கத்தின் தலைவர், Tracey McClure அவர்கள் கூறினார்.

1934ம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வாளரான Hermine Speier என்ற யூதப்பெண்ணை, நாத்சி வன்முறைகளிலிருந்து காப்பாற்றி, வத்திக்கான் அருங்காட்சியகத்தின் பணியாளராக, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் நியமித்தார் என்றும், 2ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின்னர், திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அவர்கள் வத்திக்கானில் பணியாற்ற, பெண்களுக்கு அதிக வாய்ப்பளித்தார் என்றும், Tracey McClure அவர்கள், வரலாற்று குறிப்புகளை வழங்கினார்.

உலகின் பல அரசுகளில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கும் ஒரு சில நாடுகளில், வத்திக்கானும் ஒன்று என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.