2016-12-09 15:42:00

கிறிஸ்மஸ் குடிலில் மக்களின் முகங்களை காண அழைப்பு


டிச.09,2016. உடன்பிறந்த உணர்வு, பகிர்வு, வரவேற்பு, ஒருங்கிணைவு ஆகிய மனநிலைகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்மஸ் குடில் நம்மை அழைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த மால்ட்டா நாடு, மற்றும், இத்தாலியின் திரிதெந்து (Trent) பகுதி மக்களிடம் கூறினார்.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், இவ்வாண்டு, கிறிஸ்து பிறப்பு காட்சியையும், கிறிஸ்மஸ் மரத்தையும், உருவாக்கியுள்ள மால்ட்டா நாடு மற்றும் திரிதெந்து பகுதியைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோரை, இவ்வெள்ளி காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசு பிறந்த காட்சியை, நமது இல்லங்களிலும், கோவில்களிலும் காணும் ஒவ்வொரு தருணத்திலும், கடினமானச் சூழல்களில் வாழும் பல்லாயிரம் மக்களின் முகங்களை அங்கு காண்பதற்கு ஒரு வாய்ப்பு நமக்குத் தரப்படுகிறது என்று, தன் உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரத்தின் பல்வேறு நுணுக்கங்களை எடுத்துரைத்து, அவற்றிற்கு காரணமானவர்களுக்கு நன்றி சொன்ன திருத்தந்தை, குறிப்பாக, கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்த குழந்தைகளுக்கு தன் சிறப்பான பாராட்டுக்களைக் கூறினார்.

மால்ட்டா நாட்டைச் சேர்ந்த Manwel Grech என்ற கலைஞரின் படைப்பாக விளங்கும் கிறிஸ்து பிறப்பு காட்சி, அந்நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மால்ட்டாவிலிருந்து இத்தாலிக்கு வந்துள்ள குடிபெயர்ந்தோரின் கதைகளையும் இந்தக் காட்சியில் காண முடிகிறது என்று எடுத்துரைத்தார்.

குடிலுக்கு அருகே அமைந்துள்ள கிறிஸ்மஸ் மரம், படைப்பு அனைத்தையும் உருவாக்கிய நமது விண்ணகத் தந்தையை மீண்டும் தியானிக்க அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.