2016-12-09 16:27:00

எபோலா, Zika நோய்களுக்கு தரவேண்டிய பதிலிறுப்பு


டிச.09,2016. கினி, லிபேரியா, சியேரா லியோன் ஆகிய நாடுகளில், எபோலா நோய் பரவிய வேளையில், கத்தோலிக்க நிறுவனங்கள் அப்பிரச்சனையைத் தீர்க்க உடனடியாக செயல்பட்டது பாராட்டுக்குரியது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட நீதி, அமைதி அவை, டிசம்பர் 9,10 ஆகிய இரு நாட்கள் உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில், இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இவ்வெள்ளியன்று ஆற்றிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

எபோலா கொள்ளை நோயில் கற்றுக்கொண்ட பாடங்களும், Zika கொள்ளை நோய்க்கு தரப்படவேண்டிய பதிலிறுப்பும் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பன்னாட்டு கருத்தரங்கு, சனிக்கிழமை நிறைவடையும்.

இக்கருத்தரங்கில், கத்தோலிக்கத் திருஅவையுடன், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து வந்திருப்பது குறித்து தன் மகிழ்வைத் தெரிவித்த கர்தினால் டர்க்சன் அவர்கள், கொள்ளை நோய்களுக்கு, தகுந்த, உடனடியான பதில்களைத் தருவதில் எப்போதும் விழிப்பாகச் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கொள்ளை நோயின் தாக்கத்தைக் குறைப்பதோடு, இந்நோய் கண்டவர்கள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுதல்,  நோயைப்பற்றிய வதந்திகளால் மக்கள் மத்தியில் உருவாகும் அச்சம் போன்றவற்றையும் கருத்தில் கொள்வது அவசியம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் துவக்க உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.