2016-12-09 16:19:00

அமல அன்னை மரியாவுக்கு திருத்தந்தையின் அஞ்சலியும் செபமும்


டிச.09,2016. டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட்ட அமல அன்னை மரியாவின் பெருவிழாவையொட்டி, இவ்வியாழன் மாலை 4 மணி அளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரின் இஸ்பானிய சதுக்கத்தில் அமைந்துள்ள மரியாவின் திருஉருவச் சிலைக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.

உரோம் நகரின் ஆயர் என்ற முறையில், கடந்த 50 ஆண்டளவாய் திருத்தந்தையர் மேற்கொண்டு வரும் இந்த நிகழ்வில், உரோம் நகரில், திருத்தந்தையின் சார்பில் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini, மற்றும், உரோம் நகரின் மேயர், Virginia Raggi ஆகியோர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய ஒரு வேண்டுதலில், கைவிடப்பட்ட குழந்தைகள், பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள குடும்பங்கள், மற்றும் வேலையின்றி தவிக்கும் இளையோர் ஆகியோரை சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

அன்னை மரியாவைப்போல், களங்கம் ஏதுமற்ற உள்ளத்தை வளர்த்துக்கொண்டு, அதன் பயனாக, எவ்வித மறைமுக பயனையும் எதிர்பார்க்காமல், அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளும் மனநிலையையும், முகமூடிகள் ஏதும் அணியாமல் வாழும் சுதந்திரத்தையும் தந்தருளும் என்று திருத்தந்தை செபித்தார்.

இறைவன் உதவி செய்வார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த அன்னையைப்போல, அனைவரும் மனச்சோர்வுக்கு இடம்கொடாமல் வாழும் வரத்தை மரியா பெற்றுத்தர வேண்டும் என்றும் திருத்தந்தை தன் செபத்தில் குறிப்பிட்டார்.

திருத்தந்தை இச்செபத்தைக் கூறியபின், இஸ்பானிய சதுக்கத்தில் கூடியிருந்தோர் அனைவரையும், குறிப்பாக, அங்கு வந்திருந்த நோயுற்றோரையும், வயது முதிர்ந்தோரையும் வாழ்த்தினார்.

இஸ்பானிய சதுக்கத்திலிருந்து வத்திக்கானுக்குத் திரும்பும் வழியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மேரி மேஜர் பசிலிக்காவுக்குச் சென்று, அங்கு, உரோம் நகரின் காவலரான, அன்னை மரியாவின் திரு உருவத்திற்கு முன், சில நிமிடங்கள்  அமைதியாக செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.