2016-12-08 16:22:00

ஈராக்கின் பழம்பெரும் கலாச்சார பாரம்பரியத்தைக் காக்க அழைப்பு


டிச.08,2016. ஈராக் நாட்டில் நிகழ்ந்துவரும் தாக்குதல்கள், அந்நாட்டில் உள்ள பழம்பெரும் கலாச்சார பாரம்பரியத்தை அழித்துவிடாமல் இருக்க, உலக சமுதாயம் தேவையான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள், ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில் விண்ணப்பித்தார்.

UNESCO நிறுவனமும், ஐக்கிய அரபு நாடுகளும் இணைந்து, அபு தாபியில் நடத்திய, கலாச்சார பாரம்பரியங்களைக் காக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய முதுபெரும்தந்தை சாக்கோ அவர்கள், கலாச்சார பாரம்பரியத்தின் அழிவு, முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது பெருகியுள்ளது என்று கவலை வெளியிட்டார்.

"கலாச்சாரங்களைக் காப்பது மனித உரிமைகளைக் காப்பதற்கு இணையானது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பத்தை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

மனித குலத்தின் மிகப்பழமையான மெசப்பொட்டேமியா கலாச்சாரத்தின் சுவடுகளை இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் அடிப்படை வாதிகள் குழு திட்டமிட்டு அழித்து வருவதைக் குறித்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்.

இந்தப் பழமைக் கலாச்சாரத்தைக் காப்பதற்கு, மோசூல் நகரில், புனித தோமினிக் சபையைச் சேர்ந்த Najib Mussa என்ற அருள்பணியாளர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் பாராட்டினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.