2016-12-07 15:58:00

மறைக்கல்வியுரை : மீட்பருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போமாக


டிச.,07,2016. கடந்த ஓராண்டு காலமாக, அதாவது, இரக்கத்தின் யூபிலி ஆண்டின்போது இரக்கச் செயல்கள் குறித்த தன் சிந்தனைகளை புதன் மறைக்கல்வி உரைகள் வழியே திருப்பயணிகளோடு பகிர்ந்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று புதிய மறைக்கல்வி உரைத்தொடர் ஒன்றைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே! இன்று நாம் கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த புதிய தொடர் ஒன்றைத் துவக்குகின்றோம். பெரும்பாலான நேரங்களில் தீமையே வெற்றி பெற்றுவரும் இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின் மேலான ஆட்சியுரிமை, பாவத்தின் மீது அவர் அடைந்த வெற்றி, நம்மிடையே அவரின் தொடர்ந்த இருப்பு போன்றவற்றின் மீதான நம்பிக்கை, நம்மை ஆறுதல்படுத்துகிறது. “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்”என்ற இறைவாக்கினர் எசாயாவின் உன்னத ஆறுதல் வார்த்தைகள், இந்த திருவருகைக் காலத்தில் மீண்டும் ஒலிக்கக் கேட்கின்றோம். அன்னிய நாட்டில், நாடு கடத்தப்பட்டவர்களாக வாழும் தன் மக்களை  விடுவித்துக்கொண்டு வருவதாக வாக்களிக்கும் இறைவன், பாலைநிலத்தில் அவருக்கான  வழியை ஆயத்தமாக்குமாறு கேட்பதாக, இறைவாக்கினர் எசாயா உரைக்கின்றார்.   இந்த அழைப்பு, விசுவாசப் புதுப்பித்தலுக்கும், கடவுளின் மீட்பு வல்லமையில் கொள்ளும் நம்பிக்கைக்கும் அழைப்பு விடுக்கிறது. இந்த அழைப்பு நமக்கும் விடப்படுகின்றது. இயேசுவின் வருகைக்காக தயாரிக்கும் விதமாக, யூதேயாப் பாலவனப்பகுதியில் போதித்து வந்த புனித திருமுழுக்கு யோவானும் இதே வார்த்தைகளைத்தான் எதிரொலித்தார். இயேசுவின் பிறப்புக்கான எவ்வகை தயாரிப்புகள் இடம்பெற்றன என்பதை, விவிலியம் அழகாக எடுத்துரைக்கின்றது. கடவுளின் வாக்குறுதிகளில் தங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காத, அன்னை மரியா, யோசேப்பு, சக்கரியா, எலிசபெத் போன்றோர் இத்தயாரிப்பில் ஈடுபட்டனர். அவர்களின் நம்பிக்கையைப் பின்பற்றி,  அவர்களைப்போல் நாமும், நம் வாழ்வின் பாலைநிலத்தை பெருமகிழ்வின் தோட்டமாக மாற்ற உள்ள மீட்பரின் வருகைக்காக காத்திருப்போமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் சிறப்பிக்கப்பட உள்ள இரு அனைத்துலக தினங்கள் குறித்து எடுத்துரைத்தார். 9ம்தேதி சிறப்பிக்கப்படும், ஊழலுக்கு எதிரான தினமும், 10ம் தேதி சிறப்பிக்கப்படும் மனித உரிமைகள் தினமும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய உண்மை நிலைகள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது, தனிமனிதர்களின் மனச்சாட்சியோடு தொடர்புடையது என்றும், மனித உரிமைகள் என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமைகளுக்காக புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டியது என்றும் கூறினார். இந்த இரு அர்ப்பணத்திலும் கடவுள் நமக்கு ஊக்கத்தை வழங்குவாராக எனவும் கூறி தன் மறைக்கல்வி உரையை நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.